புதிய தொலைத்தொடர்பு சட்ட வரைவை மக்களவையில் அறிமுகப்படுத்தியது மத்திய அரசு
மத்திய அரசானது புதிய தொலைத்தொடர்புச் சட்ட வரைவு (2023) ஒன்றை மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறது. 138 ஆண்டுகளாக பயன்பாட்டில் இந்த தந்திச் சட்டத்திற்கு மாற்றாக இந்தப் புதிய சட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இந்தப் புதிய தொலைத்தொடர்பு சட்டமானது, தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தின் கீழ் எந்த ஒரு தொலைத்தொடர்பு சேவையையும், ரத்து செய்யும், நிறுத்தி வைக்கும் அல்லது முழுமையாகத் தன்னகப்படுத்திக் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், OTT மற்றும் இணைய வசதியைக் கொண்டு மேற்கொள்ளப்படும் அழைப்புகள் மற்றும் சேவைகளையும் இந்தத் தொடலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் கொண்டி வந்திருக்கிறது மத்திய அரசு.
தொலைத்தொடர்பு சட்டம் (2023):
இதுவரை தொலைத்தொடர்பு சேவைகளை நிர்வாகிப்பது மற்றும் அது தொடர்பான விஷயங்களைக் கையாளும் உட்சபட்ச அதிகாரத்தைக் டிராய் (Telecom Regulatory Authority of India) அமைப்பே கொண்டிருந்தது. தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் புதிய தொலைத்தொடர்பு சட்டத்தில் டிராயின் அதிகாரங்களைக் குறைத்து, அதற்குப் பதிலாக கூடுதல் அதிகாரத்தை மத்திய அரசு பெற வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. எந்த ஒரு தொலைத்தொடர்பு சேவைக்கும், நுழைவுக் கட்டணம், உரிமக் கட்டணம் மற்றும் அபராதக் கட்டணம் ஆகியவற்றை நீக்கும் அதிகாரத்தைப் புதிய தொலைத்தொடர்பு சட்டத்தின் மூலம் பெறுகிறது மத்திய அரசு. இதனை சந்தைப் போட்டி, தொலைத்தொடர்பு சேவை நீட்டிப்பு, வாடிக்கையாளர் அல்லது பயனாளர் நலன் மற்றும் தேசப் பாதுகாப்பு ஆகிய காரணங்களை முன்வைத்து மத்திய அரசு மேற்கொள்ள முடியும்.