தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் துவக்கம்
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் துவக்கி வைத்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மற்ற மாநில அதிகாரிகளும் தங்கள் மாநிலத்தில் இதனை செயல்படுத்தும் நோக்கில் தமிழகம் வந்து இத்திட்டத்தின் செயல்பாட்டினை நேரில் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து தெலுங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர ராவ், இத்திட்டத்தினை தங்கள் மாநிலத்தில் துவங்கப்போவதாக அறிவித்திருந்தார். அதன்படி, இன்று(அக்.,6) முதல் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டத்தினை அம்மாநில முதல்வர், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் துவக்கி வைத்துள்ளார்.
வெளியிடப்பட்ட உணவு பட்டியல்
அதனையடுத்து மாநிலம் முழுவதும் தெலுங்கானா அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இத்திட்டத்தினை துவக்கி வைத்துள்ளனர். ரூ.3,400 கோடி செலவில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டம் மூலம் 43,000 அரசு பள்ளிகளில் படிக்கும் 30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இதனிடையே இந்த திட்டத்தின்படி திங்கட்கிழமை தோறும் இட்லி, சாம்பார், ரவா கோதுமை உப்மா, சட்னி உள்ளிட்டவை விநியோகிக்கப்படுமாம். செவ்வாய்க்கிழமை பூரி-உருளைக்கிழங்கு, சாம்பார் மற்றும் தக்காளி சாதம், புதன்கிழமை அரசி ரவா கிச்சடி(அ)உப்புமா, சாம்பார், சட்னி, வியாழக்கிழமை தினை இட்லி(அ)பொங்கல் மற்றும் சாம்பார் பரிமாறப்படும். அதேபோல் வெள்ளிக்கிழமை போஹா(அ)தினை இட்லி(அ)உக்கானி(அ)கோதுமை ரவா கிச்சடி, சனிக்கிழமை பொங்கல்-சாம்பார் அல்லது காய்கறி புலாவ், உ.கிழங்கு குருமா உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளது.