
சொந்த ஊரிலேயே தோல்வி முகத்தில் தெலுங்கானா முதல்வர் கேசிஆர்; பிஆர்எஸ் அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
தெலுங்கானா முதலமைச்சரும் பாரத ராஷ்டிர சமிதியின் (பிஆர்எஸ்) தலைவருமான கே சந்திரசேகர் ராவ் (கேசிஆர்) தனது சொந்த ஊர் அமைந்துள்ள காமரெட்டி தொகுதியில் பின்தங்கியுள்ளார்.
காமாரெட்டியில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதிக்கும் (பிஆர்எஸ்) காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
முன்னதாக, 2018இல் நடந்த முந்தைய தேர்தலில் பிஆர்எஸ் வேட்பாளர் கம்ப கோவர்தன் காங்கிரஸ் வேட்பாளர் முகமது அலி ஷபீரை 4,557 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இங்கு காங்கிரஸ் மற்றும் பிஆர்எஸ் இடையே எப்போதும் போட்டி வலுவாகவே இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இந்த முறை காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் பிஆர்எஸ் மும்முனை போட்டியில் களமிறங்கியதால், கேசிஆர் கஜ்வெல் மற்றும் காமரெட்டி என இரண்டு தொகுதிகளில் களமிறங்கியுள்ளார்.
K Chandra Sekhar Rao trails in his own constituency
கேசிஆரை பின்னுக்குத் தள்ளிய காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள்
கஜ்வெல் தொகுதியில் கேசிஆர் முன்னிலை பெற்றிருந்தாலும், தனது சொந்த தொகுதியான காமரெட்டியில் அவர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
அந்த தொகுதியில் போட்டியிட்ட தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி மற்றும் பாஜக வேட்பாளர் வெங்கட் ரமண ரெட்டியும் மாறி மாறி முன்னிலை பெற்று வரும் நிலையில், கேசிஆர் இருவரையும் விட பின்னிலையில் உள்ளார்.
தனது சொந்த ஊரிலேயே கேசிஆர் தோல்வி முகத்தில் இருந்து மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சியின் வீழ்ச்சியை காட்டுவதாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஒட்டுமொத்தமாக மாநிலத்திலும் காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதால் பிஆர்எஸ் ஆட்சியை இழப்பது உறுதியாகியுள்ளது.