க்ரைம் ஸ்டோரி: வேலைக்கார சிறுமியை அடிமையாக்கி சித்தரவதை செய்து கொடுமைப்படுத்திய குடும்பம்
இந்த வார க்ரைம் ஸ்டோரி: குருகிராமின் செக்டார் 57இல் உள்ள ஒரு வீட்டுக்கு வேலைபார்க்க சென்ற 13 வயது சிறுமியை, அந்த குடும்பம் நாயை விட்டு கடிக்க வைத்து, ஆடையை கழற்ற சொல்லி கொடுமைப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. பீகாரைச் சேர்ந்த அந்த சிறுமியின் தாய், கடந்த ஜூன் 27ஆம் தேதி, தனது மகளுக்கு செக்டார் 57ல் உள்ள ஷஷி ஷர்மாவின் வீட்டில் வேலை வாங்கி கொடுத்திருக்கிறார். வீட்டிலேயே தங்கி வேலை செய்யும் ஒரு வேலையாள் வேண்டும் என்ற தகவலை அறிந்து, சிறுமியின் தாய் தனது மகளை 9000 ரூபாய் சம்பளத்திற்கு அந்த வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார். ஆனால், வேலைக்கு சேர்ந்ததில் இருந்து அந்த குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட சிறுமையை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை.
இந்த விவகாரம் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது?
மேலும், முதல் 2 மாதத்திற்கான சம்பளம் மட்டுமே அந்த சிறுமிக்கு வழங்கப்பட்டதாக கூறப்டுகிறது. இந்நிலையில், தனது மகளை பார்க்க அனுமதிக்கவிலை என்றதும், தனது முதலாளியின் உதவியுடன் அந்த சிறுமியின் தாய் ஷஷி ஷர்மாவின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமி வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அதன் பிறகு, செக்டார் 51 மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து, சஷி ஷர்மா மற்றும் அவரது இரண்டு மகன்கள் மீது விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல், துன்புறுத்துதல், பெண்களின் நாகரீகத்தை சீர்குலைத்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த குடும்பம் எப்படி கொடுமைப்படுத்தியது?
புகாரின்படி, பாதிக்கப்பட்ட சிறுமி வேலை செய்த வீட்டின் முதலாளியான ஷஷி ஷர்மா, அந்த சிறுமியை இரும்பு கம்பி மற்றும் சுத்தியலால் அடித்திருக்கிறார். ஷர்மாவின் இரண்டு மகன்கள் அந்த சிறுமியை நிர்வாணமாக படம்பிடித்து, தகாத முறையில் தொட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விஷயங்களை வெளியே சொல்லக்கூடாது என்று கூறி, அந்த சிறுமியின் கையில் ஆசிட்டை ஊற்றி, கொலை செய்துவிடுவோம் என்று அந்த குடும்பம் மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கும் மேல், இந்த விஷயம் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் வாயில் டேப்பை ஒட்டி அந்த சிறுமியை ஒரு அறையில் அந்த குடும்பம் அடைத்து வைத்திருந்திருக்கிறது. கூடுதலாக, அந்த சிறுமிக்கு 48 மணிநேரத்திற்கு ஒருமுறை மட்டுமே உணவு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.