நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி
இந்தவார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி: ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் என்னும் பகுதியில் வ.உ.சி. வீதியினை சேர்ந்தவர் மனோகரன்(72), இவர் ஓய்வுப்பெற்ற ரயில்வே ஊழியராவார். இவரது மனைவி புவனேஸ்வரி(54), ஈரோடு மாவட்ட வைராபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. சம்பவத்தினமான கடந்த 20ம் தேதி மனோகரன் வழக்கம்போல் காலையில் தனது நடைப்பயிற்சியினை மேற்கொள்ள சென்ற நிலையில், அவரது மனைவியான புவனேஸ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனிடையே, நடைப்பயிற்சியினை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்த மனோகரனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. தனது மனைவியான புவனேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அவர் கழுத்திலிருந்த 8 பவுன் மதிக்கத்தக்க தங்கச்சங்கிலிகளும் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை
இதனை தொடர்ந்து மனோகரன் அளித்த தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு வருகை தந்த சூரம்பட்டி காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். கொலை நடந்து 4 நாட்கள் ஆகியும் எவ்வித துப்பும் கிடைக்காத பட்சத்தில், ஈரோடு நகர துணை காவல் கண்காணிப்பாளரான ஆறுமுகம் தலைமையில் ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, புவனேஸ்வரி வீட்டின் மேலே வாடகைக்கு இருக்கும் என்னும் தனியார் பள்ளி ஆசிரியர் பல்ராம் என்பவரிடமும் காவல்துறை விசாரணை மேற்கொண்டது. அப்போது பல்ராமுடன் பணிபுரியும் ஆசிரியையின் கணவரான ஓட்டுநர் ஜெயக்குமார் பல்ராமை பார்க்க அடிக்கடி வந்து சென்றது தெரியவந்தது.
பல்ராமிடம் அடிக்கடி கடனை திரும்பக்கேட்க வந்த ஜெயக்குமார் தான் குற்றவாளி?
அதன்படி ஜெயக்குமாரை தொடர்புக்கொள்ள காவல்துறையினர் முயற்சித்ததில் அவரது செல்பொன் ஸ்விட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் காவல்துறை அவரை தேடி கண்டறிந்து விசாரணை மேற்கொண்டதில் அவர் தான் புவனேஸ்வரியை கொலை செய்துள்ளார் என்பதும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், பல்ராம் தன்னோடு பணிபுரியும் ஆசிரியையிடம் பணம் கடனாக வாங்கியுள்ளார். அதனை திரும்பக்கேட்டு அவரது கணவரான ஜெயக்குமார் அங்கு வந்துள்ளார். அடிக்கடி அவர் வந்துச்சென்றதால் புவனேஸ்வரி மற்றும் மனோகரனுக்குமே அவர் அறிமுகமாகியுள்ளார்.
கொள்ளையடிக்க முடிவு செய்த ஜெயக்குமார் - 10 நாட்கள் நோட்டமிட்டுள்ளார்
அப்போது புவனேஸ்வரி அணிந்திருந்த நகைகளை நோட்டமிட்ட ஜெயக்குமார் இருவரும் அரசு ஊழியர்கள் என்பதால் நிறைய பணம் வைத்திருப்பார்கள் என்று எண்ணி அவர்கள் வீட்டில் கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் ஆகஸ்ட்.,10ம் தேதி முதல் 10 நாட்களாக தொடர்ந்து அந்த வீட்டிற்கு பல்ராமை காணச்செல்வது போல் சென்று, மனோகரன் நடைப்பயிற்சிக்கு செல்லும் நேரம் உள்ளிட்டவைகளை கண்காணித்துள்ளார். அதனையடுத்து கடந்த 19ம் தேதி இரவு சாலையில் படுத்துறங்கிய ஜெயக்குமார் 20ம் தேதி காலை மனோகரன் நடைப்பயிற்சி செய்ய வெளியே சென்றதும் வீட்டிற்குள் புகுந்துள்ளார்.
புவனேஸ்வரி கழுத்தை கத்தியால் குத்தி நகைகளை கொள்ளையடித்த ஜெயக்குமார் கைது
இவர் கொள்ளையடிக்கும் நோக்கில் உள்ளே நுழைந்ததை புவனேஸ்வரி பார்த்துவிட, அவர் சத்தம் போடாமல் தடுக்க கையில் வைத்திருந்த கத்தி கொண்டு அவரது கழுத்தில் குத்தியுள்ளார் ஜெயக்குமார் என்று தெரிகிறது. பின்னர் அவரது கழுத்தில் இருந்த 2 சங்கிலிகளையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் எடுத்து சென்றதில், ஒரு சங்கிலியை அடைமானம் வைத்து செலவு செய்துள்ளார். தற்போது 2 சங்கிலிகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.