காலாண்டு முடிவுகள்.. பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்த டிசிஎஸ்!
இந்தியாவின் முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் (TCS) நிறுவனம், கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது. அந்நிறுவனத்தின் லாபம் தற்போது முடிந்த மார்ச் காலாண்டில் அதற்கு முந்தைய நிதியாண்டின் கடைசி காலாண்டை விட 14.76% உயர்ந்து 11,392 கோடியாக உயர்ந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது டிசிஎஸ். மேலும், அதன் வருவாயும் 16.9% உயர்ந்து 59,162 கோடியாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. நேற்று அந்நிறுவனம் காலாண்டு முடிவுகள் வெளியிடுவதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் 1% ஏற்றம் கண்டன. மேலும், காலாண்டு முடிவுகளுடன் கடந்த நிதியாண்டிற்கான டிவிடண்ட் தொகையையும் அறிவித்தது அந்நிறுவனம். அதன்படி ஒரு பங்குக்கு ரூ.24 டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்திருக்கிறது டிசிஎஸ்.
பங்குச்சந்தையில் சரிவு:
டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 14% அதிகரித்திருந்தாலும், இன்றும் பங்குச் சந்தையில் சரிவையே சந்தித்திருக்கிறது அந்நிறுவனம். இன்று காலை சரிவிலேயே வர்த்தகத்தை தொடங்கியது அந்நிறுவனப் பங்குகள், தற்போது 1.48% சரிந்து 3,193 ரூபாயில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை நிபுணர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் காலாண்டு லாபம் சராசரியாக 11,530 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எதிர்பார்ப்பை விட குறைவான லாபத்தையே டிசிஎஸ் நிறுவனம் ஈட்டியிருப்பதால், இன்று பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்திருக்கிறது. இந்தியாவில் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களில் காலாண்டு முடிவுகளை முதலில் டிசிஎஸ் நிறுவனமே வெளியிட்டிருக்கிறது. இது மற்ற நிறுவனங்களுக்கும் ஒரு அளவுகோளை நிர்ணயித்திருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.