பிபிசி அலுவலகங்களில் ரெய்டு: மொபைல்,லேப்டாப்கள் பறிமுதல்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002 குஜராத் கலவரத்தை பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படத் தொடர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சில வாரங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று(பிப் 14) காலை டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் சோதனை நடத்தினர். சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பரிமாற்ற விலை முறைகேடுகள் பற்றிய குற்றச்சாட்டுகளை அடுத்து, வருமான வரிதுறை அதிகாரிகள் பிபிசி (பிரிட்டிஷ் ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷன்) அலுவலகங்களில் ஒரு "ஆய்வு" மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர். சுமார் 20 வருமான வரிதுறை அதிகாரிகள் பிபிசியின் டெல்லி அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மும்பையில், தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பிபிசி ஸ்டுடியோஸில் சோதனை நடத்தப்பட்டது. ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், பத்திரிகையாளர்களின் மொபைல் மற்றும் லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது ஒரு ஆய்வு. சோதனை அல்ல.
இது ஒரு ஆய்வு மட்டுமே, சோதனை அல்ல என்றும், மொபைல்கள் திருப்பித் தரப்படும் என்றும் வருமான வரிதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். "எங்களுக்கு சில விளக்கங்கள் தேவைப்பட்டன. அதற்காக எங்கள் குழு பிபிசி அலுவலகத்திற்குச் சென்றது. நாங்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் அதிகாரிகள் கணக்கு வழக்கை சரிபார்க்கச் சென்றுள்ளனர், இவை சோதனைகள் அல்ல." என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரி அதிகாரிகள், பிபிசியின் நிதித் துறையிடம் அதன் கணக்குகளின் விவரங்களைக் கேட்டதாக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. கடந்த மாதம், பிபிசியின், "இந்தியா: தி மோடி கொஸ்டின்" என்ற ஆவணத்தொடர் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. இதனால், இந்தியாவில் பெரும் சர்ச்சை கிளம்பியது என்பது குறிப்பிடத்தக்கது