தமிழர்கள் தமிழுடன் இந்தியையும் படிக்க வேண்டும்; மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) இந்தியாவில் உள்ள மாணவர்கள் தங்கள் தாய்மொழியுடன் இந்தியையும் கற்க வேண்டும் என வலியுறுத்தினார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள இந்திய ஆசிரியர் கல்விக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறும் மாணவர்களிடையே உரையாற்றியபோது அவர் இதைத் தெரிவித்தார். அப்போது சமஸ்கிருத மொழி, உபநிடதங்கள் மற்றும் வேதங்களில் உள்ள அறிவுச் செல்வத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமித் ஷா வலியுறுத்தினார். மேலும், நமது பண்டைய இந்திய கல்வித் தத்துவத்தை நவீன பரிமாணத்துடன் இணைப்பது முக்கியம் என்று மத்திய அமைச்சர் கூறினார். அறிவு மற்றும் அறிவியல் துறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மாற்றங்களைப் புரிந்துகொண்டு இரண்டையும் ஒன்றிணைத்து முழுமையான கல்வி முறையை உருவாக்க வேண்டும் என்றார்.
அனைத்து இந்திய மொழிகளையும் மேம்படுத்த வேண்டும்: அமித் ஷா
தேசிய கல்விக் கொள்கை 2020இன் முக்கிய அம்சம் மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழியில் கற்பிப்பதாகும் என்று அமித் ஷா கூறினார். அவர் தொடர்ந்து, "அனைத்து இந்திய மொழிகளிலும் நமது கலாச்சாரம், வரலாறு, இலக்கியம் மற்றும் இலக்கணம் உள்ளதால் அவற்றைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும் உங்கள் பொறுப்பு. நமது மொழியை வலிமையாக்க வேண்டும். ஆங்கிலத்துடன் பிரெஞ்சு, ஜெர்மன் ஆகியவற்றைக் கற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் குஜராத்தில் இருக்கும் ஒரு மாணவன் குஜராத்தி மற்றும் இந்தி இரண்டையும் கற்க வேண்டும். ஒரு அசாமி அஸ்ஸாமி மற்றும் இந்தி இரண்டையும் கற்க வேண்டும். ஒரு தமிழன் தமிழ் மற்றும் இந்தி இரண்டையும் கற்க வேண்டும். இது நடந்தால், நம் நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது." என்றார்.