மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தமிழ்நாட்டில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று வருவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (ஆர்எம்சி) தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை (நவம்பர் 25), இந்த அமைப்பு மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பற்றுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, இரண்டு நாட்களுக்குள் தமிழக-இலங்கை கடற்கரையை நெருங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் உள்ளிட்ட குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என ஆர்எம்சி இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
இதற்கிடையில், விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அமலில் உள்ளது. ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர் போன்ற பிற மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும். சென்னையில், நவம்பர் 27 மற்றும் 29 க்கு இடையில் மழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு ஒரு சூறாவளியாக உருவாகுமா என்பதை தீர்மானிக்க தொடர் கண்காணிப்பு தேவை என்றும் ஆர்எம்சி குறிப்பிட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. கனமழையை முன்னிட்டு சம்பந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் விழிப்புடன் இருக்கவும், பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.