தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்!
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த புயல் சென்னையின் தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் தற்போது மணிக்கு 12 கி.மீ.வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கப் போகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம், சென்னை, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, வேலூர், பெரம்பலூர், நாமக்கல், திருவாரூர், திருவள்ளூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கொடைக்கானல், சிறுமலை (வட்டம்), கிருஷ்ணகிரி(பள்ளிகளுக்கு மட்டும்), தருமபுரி, கரூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருச்சி, திருப்பத்தூர், தேனி(பள்ளிகளுக்கு மட்டும்), தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மட்டும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் புயலால் ஏற்படும் சேதங்கள்:
மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தினால் விழுப்புரம் கோட்டக்குப்பம் அருகே உள்ள பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில், 3 வீடுகள் இடிந்து சேதம் அடைந்ததுள்ளன. கடந்த 2 நாட்களுக்குள் 5 வீடுகள் இடிந்து சேதமடைந்து இருக்கிறதாம். இது போக, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழையாலும் பலத்த காற்றாலும் பல வீடுகளும் கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மேலும், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மாமல்லபுரம் அருகே இந்த மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் மணிக்கு 80 km வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், முடிந்தவரை பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.