ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியீடு
செய்தி முன்னோட்டம்
பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அறிவித்துள்ளது.
முன்னதாக, அதிமுக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் தேமுதிக தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது தவெகவும் இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பரில் உடல்நலக்குறைவால் காலமான பிறகு அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
ஜனவரி 10 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், திமுக சார்பாக வி.சி.சந்திரகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக சீதாலட்சுமி ஆகியோர் பிரதமானமாக போட்டியிடுகின்றனர்.
யாருக்கும் ஆதரவில்லை
இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரை உள்ளாட்சி அமைப்பு அல்லது இடைத்தேர்தல்கள் உட்பட எந்தத் தேர்தலிலும் பங்கேற்கக்கூடாது என்ற கட்சியின் நிலைப்பாட்டை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தினார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போன்ற கடந்த கால நிகழ்வுகளை மேற்கோள் காட்டி, இடைத்தேர்தல் முடிவுகளில் ஆளும் அரசாங்கங்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்துவதையும் ஆனந்த் விமர்சித்தார்.
மேலும், இந்த இடைத்தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்க மாட்டோம் என்று தவெக தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் பிப்ரவரி 8 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.