Loading...
தமிழக வானிலை அப்டேட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பொழியும்?
அக்டோபர் 1 வரை பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது

தமிழக வானிலை அப்டேட்: எந்தெந்த மாவட்டங்களில் மழை பொழியும்?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 27, 2026
05:15 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக மதுரை, திருச்சி, ஈரோடு, நாகை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி சதமடித்துள்ள நிலையில், இன்று முதல் அக்டோபர் 1 வரை பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு உள் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வழுவிழந்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வழுவிழக்கக்கூடும் என்பதால் தமிழகத்தில் மழைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

மழை விவரம்

நாள் வாரியான மழை விவரம்

இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கி.மீ வேகம்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு உட்பட 19-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 29, ஈரோடு, நாமக்கல் மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னை வானிலை நிலவரம்

அக்டோபர் 1 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

ADVERTISEMENT