வளிமண்டல சுழற்சியால் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கொட்டப் போகிறது மழை?
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
அடுத்தடுத்த நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை விவரம்
அக்டோபர் 21: தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, டெல்டா மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 22: தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
அக்டோபர் 23 & 24: மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதி வானிலை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.
அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கேரளா - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.