Loading...
தமிழகப் பள்ளிகளில் இனி தினமும் உடற்கல்வி வகுப்பு: புதிய டைம்டேபிளை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்
மாணவர்களுக்காக மாற்றியமைக்கப்பட்ட புதிய கால அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டுள்ளார் (pc: The Hindu)

தமிழகப் பள்ளிகளில் இனி தினமும் உடற்கல்வி வகுப்பு: புதிய டைம்டேபிளை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 13, 2026
01:18 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக மாற்றியமைக்கப்பட்ட புதிய கால அட்டவணையைப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டுள்ளார். இதில் மாணவர்களின் உடற்பயிற்சி மற்றும் இணைய வழிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய பாடவேளை அட்டவணையின்படி, வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 2 நாட்கள் பாடத்திட்டம் சாராத பிற செயல்பாடுகளுக்கான (Extra-curricular activities) வகுப்புகளாக ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தேவைப்படும் பட்சத்தில் அவற்றை உடற்கல்வி வகுப்புகளாக மாற்றிக் கொள்ளலாம். இதனால் மாணவர்களுக்கு வாரம் முழுவதும் தினமும் உடற்கல்வி நேரம் கிடைக்கும்.

பாடவேளைகள்

மொழி மற்றும் முக்கிய பாடவேளைகள்

1 முதல் 10 ஆம் வகுப்பு வரை வாரத்திற்கு 3 உடற்கல்வி பாடவேளைகளும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு வாரத்தில் 2 பாடவேளைகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களுக்கு வாரத்தில் 4 பாடவேளைகளும்; கணிதம், அறிவியல் பாடங்களுக்குக் கூடுதலாக ஒரு பாடவேளையும் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை செயல்படும். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 90 நிமிடங்கள் கொண்ட பாடவேளையாகவும், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் கொண்ட பாடவேளையாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் நியமனம்

பாகுபாடற்ற விளையாட்டு & ஆசிரியர் நியமனம்

பள்ளிகளில் விளையாட்டு மற்றும் உடற்கல்வி வகுப்புகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் தவிர்க்கவோ புறக்கணிக்கவோ கூடாது என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், விளையாட்டுகளில் சாதி, மதம் போன்ற எந்தவித பாகுபாடும் காட்டக் கூடாது என்றும், காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு அரசு சார்பில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT