தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம்
தமிழகத்தின் முதல் மற்றும் இந்தியாவின் இரண்டாவது திருநங்கை காவலர் என்னும் பெருமையை பெற்றவர் நஸ்ரியா. கோவையில் மாநகர காவல் துறையில் பணிபுரிந்து வந்த இவர், நேற்று முன்தினம் திடீரென தனது ராஜினாமா கடிதத்தோடு கோவை மாநகர தலைமை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காவல்துறை பணியில் சேர்ந்ததில் இருந்து பல அத்துமீறல்களை எதிர்கொண்டுள்ளேன். தற்கொலைக்கு தூண்டும் அளவிற்கு பிரச்சனைகளை சந்தித்து வந்தேன். இந்நிலையில் தற்போது எங்கள் பிரிவில் ஆய்வாளராக உள்ள மீனாம்பிகை எனது பாலினம் குறித்தும், சாதி குறித்தும் மிக இழிவாக பேசுகிறார். மனரீதியாக டார்ச்சர் செய்கிறார். நானும் பணியிட மாறுதல், விடுப்பு என அனைத்தையும் செய்துபார்த்தேன் என்று ஆதங்கத்தோடு கூறியுள்ளார்.
நஸ்ரியா மீது ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் ஆணையர் தகவல்
மேலும் பேசிய அவர், இனியும் என்னால் முடியாது என்பதால் என் பணியினை ராஜினாமா செய்ய முடிவுசெய்து இங்கு ராஜினாமா கடிதத்தினை கொடுக்க வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். இதனைதொடர்ந்து நஸ்ரியாவை அழைத்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவர், நஸ்ரியாவின் ராஜினாமா குறித்த முடிவை கைவிட்டு, எழுத்துபூர்வமாக தனது புகார்களை எழுதிதருமாறும், அதன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அறிவுறுத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. அதன்படி நஸ்ரியாவும் புகாரளித்துள்ளார். இதுகுறித்து துணை ஆணையர் சந்தீஸ் விசாரணை மேற்கொள்வார் என்றும், ஏற்கனவே திருநங்கை காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆணையர் கூறியுள்ளார். எனினும் அவர் தற்போது அளித்துள்ள புகாரின்பேரில், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியது குறிப்பிடத்தக்கது.