LOADING...
இனி வீட்டிலிருந்தே பத்திரம் பதியலாம்! தமிழக பதிவுத்துறையில் டிஜிட்டல் புரட்சி!
புதிய ஆன்லைன் திட்டத்தை பதிவுத்துறை செயல்படுத்த உள்ளது

இனி வீட்டிலிருந்தே பத்திரம் பதியலாம்! தமிழக பதிவுத்துறையில் டிஜிட்டல் புரட்சி!

எழுதியவர் Venkatalakshmi V
Jan 19, 2026
12:41 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் சொத்து விற்பனை மற்றும் பரிமாற்றங்களுக்கான பத்திர பதிவு நடைமுறையை மேலும் எளிமையாக்க, 'எங்கும் எப்போதும்' என்ற புதிய ஆன்லைன் திட்டத்தை பதிவுத்துறை செயல்படுத்த உள்ளது. இந்த வசதியின் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில், தங்களின் இருப்பிடத்திலிருந்தே இணையம் வாயிலாக பத்திரங்களைப் பதிவு செய்ய முடியும். தற்போது அமலில் உள்ள நடைமுறைப்படி, சொத்து எந்த சார்பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்டதோ, அங்கு நேரடியாக சென்றுதான் பத்திரங்களை பதிவு செய்ய வேண்டும். பின்னர் 'ஸ்டார் 2.0' மென்பொருள் மூலம் மாவட்ட அளவில் எந்த அலுவலகத்திலும் பதியலாம் என்ற வசதி கொண்டு வரப்பட்டது. அதன் அடுத்தகட்டமாக, தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி பதிவுத்துறை ஸ்டார் 3.0 புதிய முறையை அறிமுகப்படுத்தவுள்ளது.

விவரங்கள்

ஆதார் மூலமாக கையெப்பம் சரி பார்க்கப்படும்

இதன்படி, நில உரிமையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் தங்களின் ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பித்து, ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் அல்லது டிஜிட்டல் கையொப்பம் மூலம் சரிபார்ப்புகளை முடிக்கலாம். இதன் மூலம் சார்பதிவாளர் அலுவலகங்களில் நிலவும் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படுவதுடன், இடைத்தரகர்களின் குறுக்கீடும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விடுமுறை நாட்களிலும் அல்லது இரவு நேரங்களிலும் கூட பத்திரங்களை சமர்ப்பிக்கும் வசதி இதில் அடங்கும். இத்திட்டம் முதற்கட்டமாகச் சில மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு, பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பொதுமக்களுக்கு நேர விரயத்தை குறைப்பதுடன், வெளிப்படையான நிர்வாகத்திற்கும் வழிவகுக்கும்.

Advertisement