திருச்சியில் பிரதமர் மோடி: ரூ.20,000 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்கள் தொடக்கம்
திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் இன்று கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் உட்பட விமானம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, கப்பல் போக்குவரத்து மற்றும் உயர்கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு ரூ.20,000 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களை அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். திருச்சியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியின் போது அவரை விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
'ஒவ்வொரு பட்டதாரியும் 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பங்களிப்பார்கள்'
"பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டது எனக்கு மிகவும் முக்கியமானது. 2024ல் இது எனது முதல் பொது உரையாடல்" என்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் பேசினார். "தமிழ்நாடு என்னும் அழகிய மாநிலத்திலும், இளைஞர்கள் மத்தியிலும் நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பட்டமளிப்பு விழாவுக்கு இங்கு வரும் பாக்கியம் பெற்ற முதல் பிரதமர் நான். இன்று இங்கிருந்து பட்டம் பெறும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரை வாழ்த்துகிறேன். நீங்கள் கற்றுக்கொள்ளும் அறிவியல் உங்கள் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயிக்கு உதவும். நீங்கள் கற்றுக் கொள்ளும் பொருளாதாரம் வறுமையைக் குறைக்க உதவும். ஒரு வகையில் இங்குள்ள ஒவ்வொரு பட்டதாரியும் 2047க்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க பங்களிப்பார்கள்." என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.