ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையேயான ரயில்வே திட்டத்தினை கைவிட கோரும் தமிழக அரசு
கடந்தாண்டு 2018-19ம் ஆண்டில் ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே 17.2 கி.மீ., தூரத்திற்கான அகல ரயில் பாதையினை அமைக்க முடிவு செய்த மத்திய அரசு, இந்த திட்டத்திற்காக ரூ. 208.3 கோடி செலவாகும் என்றும் கணக்கீடு செய்தது. இதனையடுத்து கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடி இந்த திட்டத்தினை அடிக்கல் நாட்டி துவக்கிய நிலையில், அதற்கான பணிகள் தற்போது மிக தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையே, ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையேயான ரயில் பாதையினை அமைப்பதற்கான ஆண்டு வாரியான நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவை எம்.பி.அகிலேஷ் பிரசாத் சிங் எழுத்துபூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். அவருடைய இத்தகைய கேள்விக்கு ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தற்போது பதில் ஒன்றினை அளித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
1964ம்ஆண்டு முற்றிலுமாக ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது
அதன்படி அவர், கடந்த ஏப்ரல் மாதம் 21ம்தேதி தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒரு கடிதத்தினை எழுதியனுப்பியுள்ளது. அதில், சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி உள்ளதால் ராமேஸ்வரம்-தனுஷ்கோடி இடையே ரயில்பாதை அமைக்கும் பணியினை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என ரயில்வேத்துறை அமைச்சர்.,அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூர்வமாக தனது பதிலினை அளித்துள்ளார். முன்னதாக கடந்த 1964ம்ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் புயல் உண்டான நிலையில், அதிலிருந்து எழுந்த பேரலையில்தனுஷ்கோடியில் ஒரு சிலரை தவிர அனைவரும் உயிரிழந்தனர். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் கவிழ்ந்து கடலில் விழுந்து மூழ்கியது. ரயில் பாதைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு முற்றிலுமாக ரயில் போக்குவரத்து இந்த பாதையில் துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.