விவசாயிகளே கவனத்திற்கு! கூட்டுறவு பயிர்க்கடன் வசூல் நிறுத்தம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற நிலுவை பயிர்க்கடன்களை வசூலிப்பது முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு அனைத்துக் கூட்டுறவு சங்கங்களுக்கும் தவறாமல் கடப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
புகார்கள்
கடன் வசூல் புகார்களும் அரசின் உடனடி நடவடிக்கையும்
கூட்டுறவு சங்க நிலுவைக் கடன்களை வசூலிக்க துறை அதிகாரிகள் முயற்சிப்பதாக பல்வேறு விவசாயிகளிடமிருந்து தொலைபேசி வாயிலாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இப்புகார்களின் அடிப்படையில், பயிர்க்கடன் வசூல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதை அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
எந்தவொரு விவசாயியையும் கடன் வசூலுக்காக கூட்டுறவு சங்கங்கள் வற்புறுத்தக் கூடாது என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் எண்
புகார் அளிக்கச் சிறப்பு வாட்ஸ்அப் எண் அறிவிப்பு
நிலுவையிலுள்ள பயிர்க்கடனை வசூலிக்கக் கூட்டுறவு சங்கத்திலிருந்து யாரேனும் தொடர்புகொண்டால், விவசாயிகள் உடனடியாக புகார் அளிக்கலாம்.
இதற்காக கூட்டுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ குறைதீர்வு வாட்ஸ்அப் எண்ணாக 9884000845 அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கம் அல்லது அதிகாரிகள் தொடர்புகொண்ட கைபேசி எண் மற்றும் கூட்டுறவு சங்க விவரங்களை இந்த எண்ணிற்கு அனுப்பி விவசாயிகள் உடனடியாகப் புகார் பதிவு செய்யலாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.