Loading...
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை: நெல், அரிசி மற்றும் பருப்பு வகைகளுக்கு தமிழ்நாடு அரசு இருப்பு வரம்பு நிர்ணயம்
நெல், அரிசி, பருப்பு வகைகளுக்கு இருப்பு வரம்பு விதித்து தமிழக அரசு உத்தரவு.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை: நெல், அரிசி மற்றும் பருப்பு வகைகளுக்கு தமிழ்நாடு அரசு இருப்பு வரம்பு நிர்ணயம்

எழுதியவர் Vasuki
Nov 14, 2026
04:15 pm

செய்தி முன்னோட்டம்

அத்தியாவசிய உணவு பொருட்களான அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலை உயர்வையும் செயற்கையான பதுக்கலையும் கட்டுப்படுத்தும் நோக்கில், நெல், அரிசி, துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றை இருப்பில் வைப்பதற்குத் தமிழக அரசு அதிரடியாக உச்சவரம்பு (Stock Limit) நிர்ணயித்துள்ளது. மத்திய அரசின் முன் அனுமதியுடன், அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாக இருப்பு வைத்துள்ள வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள், வரும் நவம்பர் 16-ஆம் தேதிக்குள் தங்களது இருப்பை வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் எனத் தமிழக அரசு கெடு விதித்துள்ளது.

உச்சவரம்பு

நெல் மற்றும் அரிசிக்கான கையிருப்பு உச்சவரம்பு

தமிழ்நாடு அரசின் புதிய உத்தரவின்படி, நெல் மற்றும் அரிசியைப் பொறுத்தவரை மொத்த வியாபாரிகள் அதிகபட்சமாக 2,000 மெட்ரிக் டன் வரை மட்டுமே இருப்பு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

சில்லறை வியாபாரிகள் மற்றும் பெரிய சில்லறை விற்பனை நிலையங்கள் தங்களது ஒவ்வொரு கிளையிலும் அதிகபட்சம் 8 மெட்ரிக் டன் வரை மட்டுமே இருப்பு வைக்க வேண்டும்.

அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களது ஒரு மாத உற்பத்தித் திறனுக்கு மிகாமலும், பதப்படுத்துபவர்கள் 2027 ஜனவரி வரை எஞ்சியிருக்கும் மாதங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு மாதாந்திர நிறுவப்பட்ட திறனில் 60 சதவீதத்திற்கு மிகாமலும் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

அரிசி மற்றும் நெல்லுக்கான இந்தக் கட்டுப்பாடு வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

கட்டுப்பாடுகள்

துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு கட்டுப்பாடுகள்

அதேபோல், துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு வகைகளுக்கு மொத்த வியாபாரிகள் ஒவ்வொரு வகையிலும் அதிகபட்சமாக 200 மெட்ரிக் டன் வரையும், சில்லறை வியாபாரிகள் தலா 5 மெட்ரிக் டன் வரையும் மட்டுமே இருப்பு வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பருப்பு ஆலை உரிமையாளர்கள் கடந்த 3 மாத உற்பத்தி அல்லது ஆண்டு உற்பத்தித் திறனில் 25 சதவீதம் ஆகியவற்றில் எது அதிகமோ அந்த அளவை மட்டுமே கையிருப்பில் வைத்திருக்க முடியும்.

அரிசி மற்றும் பருப்பு இறக்குமதியாளர்கள் சுங்கத் துறையின் அனுமதி பெற்ற நாளிலிருந்து 45 நாட்களுக்கு மேல் இறக்குமதி செய்யப்பட்ட சரக்குகளைத் தேக்கி வைக்கக் கூடாது எனக் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருப்பு வகைகளுக்கான இருப்பு வரம்பு அடுத்த 3 மாதங்களுக்குச் செயல்பாட்டில் இருக்கும்.

ADVERTISEMENT

கட்டணமில்லா புகார் எண்

கட்டாயப் பதிவேற்றமும் கட்டணமில்லா புகார் எண்களும்

வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் தங்களது தற்போதைய கையிருப்பு விவரங்களை மத்திய நுகர்வோர் விவகாரத் துறையின் இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்.

அதேசமயம், விவசாயிகள் தங்களது சொந்த விளைபொருட்களைச் சேமித்து வைப்பதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ இந்த இருப்பு வரம்பு கட்டுப்பாடு பொருந்தாது என அரசுத் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை விற்பனையைத் தடுக்க அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், விதிமீறல்கள் குறித்துப் பொதுமக்கள் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT