ஸ்விக்கி, ஊபர் உள்ளிட்ட இணையவழி ஊழியர்களுக்கு தனி நலவாரியம் - தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை போன்ற பெருநகரங்களில் ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற வாடகை வாகன சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல் சோமேட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. மளிகை பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் டெலிவரி செய்யும் ப்ளிப்கார்ட், அமேசான், போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களும் செயல்பாட்டில் உள்ளது. இது போன்ற நிறுவனங்களில் டெலிவரி செய்யும் பணியில் முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும் பலர் பணிபுரிகிறார்கள். ஆனால் இவர்களுக்கு பணி நிரந்தரம், பணியிட பாதுகாப்பு என எதுவும் இல்லை. இவர்களுக்கு வேண்டிய சலுகைகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது.
பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவதற்கு வழிவகை
இந்நிலையில், தமிழகம் முழுவதும் இணையவழி உணவு டெலிவரி செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்பு சாரா கிக் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க அவர்களுக்கு என தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அறிவித்திருந்தார். அதன்படி தற்போது தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியம் என்னும் புது நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான தமிழக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாரியத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டு பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.