போக்குவரத்து ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகையாக ₹6.41 கோடி ஒதுக்கீடு; தமிழக அரசு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
போக்குவரத்து துறை ஊழியர்களின் சிறப்பான சேவையை பாராட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ₹6.41 கோடி சிறப்பு ஊக்கத்தொகையாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், போக்குவரத்துத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், கிராமப்புறங்கள் முதல் பெருநகரங்கள் வரை மாநிலம் முழுவதும் நம்பகமான சேவைகளை வழங்குவதில் மாநில போக்குவரத்துக் கழகங்களின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டினார்.
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்கள், பயணிகள் அடர்த்தி, பேருந்து பயன்பாடு, எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றில் நாட்டிலேயே முன்னணியில் உள்ளன என்றார்.
தற்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து மேம்பாட்டு நிதிக் கழகம், பல்லவன் போக்குவரத்து ஆலோசனைக் குழு போன்ற நிறுவனங்களில் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
ஊக்கத்தொகை
ஊக்கத்தொகை விபரம்
2024 ஆம் ஆண்டில் ஊழியர்கள் பணிபுரிந்த நாட்களின் அடிப்படையில் பொங்கல் ஊக்கத்தொகை விநியோகிக்கப்படும்.
இதன்படி 91-151 நாட்கள் வேலை செய்த பணியாளர்கள் ₹85 வீதமும், 151-200 நாட்கள் வேலை செய்த பணியாளர்கள் ₹195 வீதமும் ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.
அதேநேரத்தில் 200 நாட்களுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு ₹625 வீதம் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
இதன்கீழ் அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் உள்ள 1,08,105 ஊழியர்கள் பயனடைகின்றனர்.
பொதுமக்களுக்கான தடையற்ற இணைப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளை உறுதி செய்யும் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.