ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி முடிவடைகிறது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா மரணம் அடைந்ததால் இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த ஜன 4ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். கடந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ்(தமாகா) கட்சியை சேர்ந்த யுவராஜா.எம் இந்த தொகுதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 மாநிலங்களுக்கு தேர்தல்
திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளையும் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்ததுள்ளது. திரிபுராவில் பிப்ரவரி 16ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முடிவுகள் மார்ச் 2ஆம் தேதி அறிவிக்கப்படும். 3 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளும் 2024 நடக்கவிருக்கும் மெகா பொதுத் தேர்தலுக்கு முன்னோடியாகக் கருதப்படும். வடகிழக்கு மக்களின் மனநிலை மாறிவிட்டதா அல்லது பாரதிய ஜனதா கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இன்னும் ஆதரவாக உள்ளதா என்பதை இதன் முடிவுகள் வெளிப்படுத்தும் என்பதால், இது அரசியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஆளும் கட்சியில் பாஜக அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.