ரத்தத்தை கொண்டு ஓவியம் வரைய தடை - அமைச்சர் மா.சுப்பிரமணியம்
தஞ்சையில் நடைபெற்று வரும் மகர்நோம்புசாவடி நகர்ப்புற வாழ்வு மையத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் ஆய்வு செய்தார். மேலும் தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் 10ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதடு பிளவு, அன்னப் பிளவு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவர்களின் பாராட்டு விழாவில் அமைச்சர் கலந்துகொண்டார். மேற்கண்ட விழாக்களில் கலந்துகொண்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ரத்தத்தால் ஓவியங்கள் வரையப்பட்டு பரிசாக வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். ரத்தத்தை கொண்டு ஓவியம் வரையும் கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அதிகரிக்கும் 'பிளட் ஆர்ட்' கலாச்சாரம் - பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை
தற்போதைய காலக்கட்டத்தில் ட்ரெண்டாகி வருவனவற்றுள் ஒன்று தான் இந்த 'பிளட் ஆர்ட்'. தங்கள் விருப்பமானவர்களுக்கு தங்களது ரத்தத்தை எடுத்து அதில் ஓவியம் வரையப்பெற்று பரிசு அளிப்பது இப்பொழுது அதிகரித்து வருகிறது. இது சரியானது அல்ல என்று பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். முன்னதாகவே, 'பிளட் ஆர்ட்' குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியம், ஓவியம் வரைய பல வழிகள் உள்ளது. ரத்தத்தால் ஓவியம் வரைவது சரியானது அல்ல. இது கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுப்பதோடு, ஒருவரது உடலிலிருந்து முறையற்ற வழியில் எடுக்கப்படும் ரத்தத்தால் நோய்கள் பரவக்கூடும். இந்த ஓவியத்தால் எச்ஐவி தொற்று கூட வாய்ப்பு உள்ளதால் இந்த கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.