தேர்தல் முடிவுகள் 2026: தவெகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் என்ன நடக்கும்? விரிவான பார்வை
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 110 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில், பாரம்பரியக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் 47 மற்றும் 58 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. தவெகவின் இந்த அதிரடி விஸ்வரூபம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
ஆட்சி
ஆட்சியமைக்கப் போவது யார்? கூட்டணியைப் பற்றிப் பறக்கும் கேள்வி
தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியமைக்கத் தேவையான இடங்கள் ஒருவேளைக் குறையும் பட்சத்தில், விஜய் யாரோடு கைகோர்ப்பார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் வலுவாக எழுந்துள்ளது. தவெக தனது ஆட்சியை அமைக்க திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகளில் யாரிடம் ஆதரவு கோரும் என்ற விவாதம் தற்போது அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் முடிவுகள் இறுதி நிலையை எட்டும் வேளையில், இந்தத் திராவிடக் கட்சிகளின் ஆதரவு விஜய்க்குத் தேவைப்படுமா என்பது குறித்துப் பல ஊகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
விஜயின் நிலைப்பாடு
தனித்துப் போட்டி; சமரசமில்லாத அரசியல் - விஜயின் நிலைப்பாடு
தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய போதே, விஜய் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருந்தார். தவெக எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிடும் என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். தனது அரசியல் பயணத்தை ஒரு "ஜனநாயகப் போர்" என்று குறிப்பிட்ட அவர், எவருக்காகவும் அல்லது எதற்காகவும் தனது கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார். தேர்தலுக்கு முன்பாக பாஜக தரப்பில் இருந்து கூட்டணி வைக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாகச் செய்திகள் வந்த போதும், விஜய் அதனை நிராகரித்துத் தனித்து நிற்பதில் உறுதியாக இருந்தார்.
தவெக விளக்கம்
தனித்தே ஆட்சியமைப்போம் - தவெக செய்தித் தொடர்பாளர் அதிரடி
வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் இன்றைய தினத்தில், தவெகவின் செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போதைய நிலவரப்படி தவெக மிக வலுவான முன்னிலையில் இருப்பதால், மற்ற கட்சிகளின் ஆதரவின்றித் தவெக தனித்தே ஆட்சியமைக்கும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். "இருண்ட அறையில் ஓடிக்கொண்டிருந்த திமுகவிற்கு இப்போதுதான் யதார்த்தம் புரிந்திருக்கும். தவெக தனித்தே ஆட்சியமைக்கும்." என்று அவர் செய்தியாளர்களிடம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரம்
திராவிடக் கட்சிகளுடனான கூட்டணி வாய்ப்பு
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, தவெக தரப்பிலிருந்து திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான எந்த ஒரு சமிக்ஞையும் வெளியாகவில்லை. தவெக தனது சொந்த பலத்தில் ஆட்சி அமைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. எனினும், விஜய்க்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் விஜயை ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பார். அப்போது திமுக அல்லது அதிமுக வெளியிலிருந்து ஆதரவளித்தால், மைனாரிட்டி அரசாக தனியாக ஆட்சியமைக்கலாம். மறுபுறம், திமுக மற்றும் அதிமுக கூட்டங்களில் சில தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள கட்சிகள் வெற்றி பெறும்போது அவர்களை இணைத்துக் கொண்டு கூட்டணி அரசை அமைக்கலாம். எப்படியிருப்பினும், இந்த இரண்டு வழியுமே, சுதந்திரமாக செயல்பட முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளலாம். இதில் எது நடக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.