தமிழகத் தேர்தல் களம்: மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு!
செய்தி முன்னோட்டம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மதியம் 1 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
முதலிடத்தில் திருப்பூர்
மாவட்ட வாரியான நிலவரம்
மதியம் 1 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் 62.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 62.50% வாக்குகள் பதிவாகி இரண்டாம் இடத்தில் உள்ளது. ஈரோடு, கரூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் சராசரியாக 61% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்துள்ளன. மதியம் 1 மணி வரை தமிழகம் முழுவதும் மொத்தம் 3,25,76,724 பேர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.
புள்ளிவிவரங்கள்
2021 தேர்தலுடன் ஒரு ஒப்பீடு
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது, மதியம் 1 மணி நிலவரப்படி வெறும் 39.61 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. இந்த 2026 தேர்தலில் அதே நேரத்தில் 56.81 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது, தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வருகை இம்முறை மிக அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது
தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள்
100% இலக்கை நோக்கி
மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மக்கள் சோர்வின்றி வாக்குச் சாவடிகளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மாலைக்குள் இந்த வாக்குப்பதிவு சதவீதம் மேலும் உயர்ந்து, தமிழக தேர்தல் வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் வாக்களிக்காதவர்கள் உடனே உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்கள் கடமையை ஆற்றுமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.