இ-ரிக்ஷா ஓட்டியவர்... இன்று இந்தியாவின் நாயகன்! காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்ற ஜாண்டு குமார்
செய்தி முன்னோட்டம்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியா தனது முதல் பதக்கத்துடன் பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளது. ஆண்களுக்கான ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் இந்தியாவின் ஜாண்டு குமார் அபாரமாக செயல்பட்டு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். B பிரிவில் போட்டியிட்ட இவர், 190 கிலோ எடையைத் தூக்கி 130.9 புள்ளிகளுடன் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
போராட்டம்
போராட்டம் நிறைந்த கடைசி முயற்சி
தனது இரண்டாவது முயற்சியில் 190 கிலோ எடையைச் சுலபமாகத் தூக்கிய ஜாண்டு குமார், போட்டிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.
தொடர்ந்து காமன்வெல்த் சாதனை அளவான 196 கிலோ எடையைத் தூக்கத் தனது கடைசி முயற்சியில் முயன்ற போது, பார்வெல் ரேக்கில் லேசாகத் தட்டியதால் அந்த வாய்ப்பு கை நழுவியது.
இருப்பினும், இவர் பெற்ற 130.9 புள்ளிகள் இறுதிவரை தக்கவைக்கப்பட்டு, இவருக்கு வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தது. இப்போட்டியில் நைஜீரிய வீரர் தங்கம் வென்றார்.
சாதனை
வறுமையை வென்றெடுத்த வரலாற்றுச் சாதனை
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் பிறந்த ஜாண்டு குமார், இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்.
வறுமை சூழ்ந்த குடும்பத்தில் பிறந்த இவர், ஆரம்பத்தில் தனது தந்தையுடன் சேர்ந்து வீதியோரத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்திற்காக இ-ரிக்ஷா ஓட்டி வந்த ஜாண்டு குமார், தொடர் பயிற்சிகள் மற்றும் தீவிர முயற்சியால் தேசிய அளவில் தடம் பதித்து, தற்போது காமன்வெல்த் மேடையில் இந்தியக் கொடியை உயரப் பறக்கவிட்டுள்ளார்.
ஒலிம்பிக்
2028 லாஸ் ஏஞ்சலஸ் பாராலிம்பிக்ஸ் இலக்கு
தாய்நாட்டிற்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்தது குறித்துப் பேசிய ஜாண்டு குமார், "எனது நாட்டின் கொடி உயர்வதைப் பார்க்கும் போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி அடைகிறேன்" எனத் உணர்ச்சிவசப்பட்டார்.
தனது கடினமான காலத்தில் உறுதுணையாக இருந்த பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள இவர், காமன்வெல்த் வெண்கல பதக்கத்தைத் தொடர்ந்து, அடுத்து வரவிருக்கும் 2028 லாஸ் ஏஞ்சலஸ் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது அடுத்த இலக்கு எனத் தெரிவித்துள்ளார்.