சாம்சங் இந்தியாவில் ஆட்குறைப்பு: டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவில் 100 நிர்வாகிகள் பணிநீக்கம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் அதிகரிக்கும் செலவினங்கள், நுகர்வோர் தேவைக் குறைவு மற்றும் நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கை காரணமாக, சாம்சங் இந்தியா நிறுவனம் தனது தொலைக்காட்சி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைப் பிரிவில் ஆட்குறைப்பைத் தொடங்கியுள்ளது. வரைமுறையான இப் பணிநீக்க நடவடிக்கைகளின் கீழ், இதுவரை 80 முதல் 100 வரையிலான உயர் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் வரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாதிப்பு
பாதிக்கப்படும் பிரிவுகளும் ஊழியர்களின் நிலையும்
தலைமை அலுவலகத்தின் இயக்குநர் நிலையிலான அதிகாரிகள், குழுத் தலைவர்கள் மற்றும் கிளை மேலாளர்கள் வரை பல தரப்பட்ட ஊழியர்கள் இப்பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிறுவனத்தின் மொத்த மின்னணுப் பிரிவு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் ஊழியர்களில் 25 சதவீதம் பேர் வரை இத்தகைய பணிநீக்கத்திற்கு உள்ளாகலாம் எனத் தெரிகிறது.
பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு 3 மாதச் சம்பளமும், சேவை புரிந்த ஒவ்வொரு ஆண்டிற்கும் கூடுதல் ஒரு மாதச் சம்பளமும் இழப்பீடாக வழங்கப்படுகிறது.
காரணங்கள்
ஆட்குறைப்பிற்கான முக்கிய காரணங்கள்
மெமரி சிப்புகளின் விலை இருமடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது மற்றும் இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவு ஆகியவை உற்பத்திச் செலவைக் கணிசமாக உயர்த்தியுள்ளன.
இதனுடன் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஸ்மார்ட்போன்களின் விற்பனை அளவு 11-12% சரிவடைந்தது போன்ற காரணங்கள் நிறுவனத்தின் லாப வரம்பைக் கடுமையாகப் பாதித்துள்ளன.
மேலும் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் மண்டல அலுவலகங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளிலும் சாம்சங் ஈடுபட்டுள்ளது.
தற்போதைய நிலை
ஸ்மார்ட்போன் பிரிவின் தற்போதைய நிலை
சாம்சங்கின் மொத்த வருவாயில் முக்கால்வாசி பங்கு ஸ்மார்ட்போன் பிரிவிலிருந்து வருவதால், அப்பிரிவு ஊழியர்கள் இந்த ஆட்குறைப்பில் தற்போதைக்குச் சேர்க்கப்படவில்லை.
வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிக்கும் என நிறுவனம் நம்புகிறது.
இருப்பினும், பண்டிகை காலத்திற்கு பிறகு சந்தை விற்பனை சூழலைக் கருத்தில் கொண்டு கூடுதல் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சவாலான சந்தை சூழலுக்கு மத்தியிலும் செலவுகளைக் கட்டுப்படுத்தி நிதி நிலையை சீராக்கவே சாம்சங் இந்நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.