இஸ்ரோ ஒருபோதும் தனியார்மயம் ஆகாது! தனியார் துறை பங்கேற்பு குறித்து விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது என்றும், நாட்டின் விண்வெளித் திட்டங்களில் அதன் முதன்மை முக்கியத்துவம் எந்த வகையிலும் குறையாது என்றும் இஸ்ரோ நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், இஸ்ரோவை தனியார்மயமாக்கும் முயற்சியோ அல்லது அதன் பங்கைக் குறைக்கும் முயற்சியோ அல்ல என்று எழுந்துள்ள சந்தேகங்களுக்கு இஸ்ரோ நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தனியார் துறை பங்கேற்பு
தனியார் துறை பங்கேற்பின் உண்மையான நோக்கம்
இந்திய விண்வெளித் துறையின் கட்டமைப்பை உலக அளவில் விரிவுபடுத்தவே 2020 முதல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வணிக ரீதியான ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள் தயாரிப்பு போன்ற முதிர்ச்சியடைந்த தொழில்நுட்பங்களை தொழில் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும்.
இதன் மூலம் இஸ்ரோவின் முதன்மை விஞ்ஞானிகள் தங்களின் முழுக் கவனத்தையும் அடுத்த தலைமுறை விண்வெளி ஆராய்ச்சிகளில் செலுத்த வழிவகை செய்யப்படும்.
எதிர்காலத் திட்டம்
தொழில்நுட்ப மாற்றமும் இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்களும்
முதிர்ந்த தொழில்நுட்பங்களை தனியார் துறைக்கு மாற்றுவது என்பது அப்பணியில் இருந்து இஸ்ரோ முற்றிலுமாக விலகுவதாக அர்த்தமாகாது.
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், ஆழமான விண்வெளி மற்றும் கோள்கள் ஆராய்ச்சி, புதிய தலைமுறை ஏவுகணைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு அமைப்புகள் போன்ற அதிநவீன ஆராய்ச்சிகளில் இஸ்ரோவின் பங்கு மேலும் பலப்படுத்தப்படும்.
வழக்கமான உற்பத்திகளைத் தனியார் துறை பார்த்துக்கொள்ளும் போது, இஸ்ரோ எதிர்காலத் தேவைகளுக்கான அதிநவீனத் தொழில்நுட்பங்களை உருவாக்கும்.
விண்வெளி கட்டமைப்பு
இஸ்ரோ தலைமையிலான தேசிய விண்வெளி கட்டமைப்பு
இந்தியாவின் எதிர்கால விண்வெளித் துறை முற்றிலும் இஸ்ரோ தலைமையிலான தேசிய விண்வெளி அமைப்பாகவே தொடர்ந்து இயங்கும்.
தனியார் துறையினரின் முதலீடு மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவை நாட்டின் வளர்ந்து வரும் விண்வெளி லட்சியங்களுக்குத் துணையாக மட்டுமே இருக்கும்.
எனவே இஸ்ரோவின் முக்கியத்துவம் குறைக்கப்படும் என்ற அச்சம் தேவையில்லை என்றும், புதிய ஆராய்ச்சிகள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் இஸ்ரோ தொடர்ந்து முதன்மை அமைப்பாக விளங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.