மிஸ் வேர்ல்ட் 2026: உலக அழகி பட்டம் வென்றார் ஜோஹேரி மோலா: யார் இவர்?
செய்தி முன்னோட்டம்
வியட்நாமின் நட்ராங் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற 73வது மிஸ் வேர்ல்ட் 2026 அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில், டொமினிகன் குடியரசை சேர்ந்த ஜோஹேரி மோலா டோமிங்குஸ் வெற்றி பெற்று புதிய உலக அழகியாக முடிசூட்டப்பட்டுள்ளார். 110 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில், ஸ்பெயின் நாட்டின் எலிசபெத் ரெய்னெஸ் முதல் ரன்னர்-அப் இடத்தையும், மலேசியாவின் தனுஷியா செட்டி இரண்டாவது ரன்னர்-அப் இடத்தையும் பிடித்தனர். கடந்த ஆண்டின் வெற்றியாளரான தாய்லாந்தின் ஓபல் சுசாடா இவருக்கு மகுடத்தை சூட்டினார்.
பின்னணி
யார் இந்த ஜோஹேரி மோலா? கல்வி மற்றும் பணிப் பின்னணி
24 வயதான ஜோஹேரி மோலா ஒரு சிறந்த கல்வியாளர், சமூக ஆர்வலர், ஊடகவியலாளர் மற்றும் தொழில்முறை மாடல் ஆவார்.
யுனிவர்சிடாட் ஐபெரோஅமெரிகானாவில் வணிக மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் பட்டம் பெற்றுள்ள இவர், வாய்ஸஸ் ஆஃப் டுமாரோ என்ற அமைப்பின் நிறுவனராக செயல்பட்டு வருகிறார்.
இந்த அமைப்பின் மூலம் நலிவடைந்த சமூகங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு ஆங்கில வழிக் கல்வியை வழங்கி, அவர்களின் விமர்சன சிந்தனை மற்றும் தனிநபர் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறார்.
இறுதிச் சுற்று
வெற்றிக்குக் காரணமான இறுதிச் சுற்று பதில்
இறுதிச் சுற்றில் நோக்கத்துடன் கூடிய அழகு திட்டம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "எளிமையான பின்னணியைக் கொண்ட குழந்தைகளுக்கு ஆங்கில மொழியைக் கற்பிப்பதே எனது முதன்மைத் திட்டம்" என அவர் பதிலளித்தார்.
ஆங்கில மொழி அறிவு அவர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புக் கதவுகளைத் திறந்துவிடும் என்றும், தங்களது எண்ணங்களையும் நோக்கங்களையும் உலகிற்கு வெளிப்படுத்த உதவும் ஒரு ஆயுதமாக அது இருக்கும் என்றும் அவர் உணர்வுப்பூர்வமாகத் தெரிவித்த பதில் நடுவர்களைப் பெரிதும் கவர்ந்தது.
44 ஆண்டுகள் இடைவெளி
டொமினிகன் குடியரசிற்கு 44 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த மகுடம்
ஜோஹேரி மோலாவின் இந்த பிரம்மாண்ட வெற்றி டொமினிகன் குடியரசு நாட்டிற்கு இரண்டாவது மிஸ் வேர்ல்ட் பட்டத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
முதன்முறையாக 1982 ஆம் ஆண்டு மரியாசெலா ஆல்வாரெஸ் அந்த நாட்டிற்குப் பட்டத்தை வென்று தந்த நிலையில், தற்போது 44 ஆண்டுகளுக்குப் பிறகு மோலா மீண்டும் அந்தப் பெருமையைத் தேடித்தந்துள்ளார்.
இதனிடையே, இந்திய சார்பில் பங்கேற்ற நிலாஞ்சனா பாண்டே / நிகிதா போர்வால் டாப் 40 சுற்றோடு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.