ஐநா புதிய உலக வரைபடம் ஒப்புதல்: ஆப்பிரிக்கா பெரிதாகவும், அமெரிக்கா சிறியதாகவும் மாற்றம்
செய்தி முன்னோட்டம்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பில், 16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டில் உள்ள மெர்கேட்டர் உலக வரைபடத்திற்குப் பதிலாகப் புதிய ஈக்வல் எர்த் வரைபடத்தைப் பயன்படுத்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தோகோ நாடு கொண்டு வந்த இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 164 நாடுகளும், எதிர்ப்பாக அமெரிக்கா மட்டுமே ஒரு வாக்கையும் அளித்தன. ஆறு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகி இருந்தன.
தவறான வரைபடம்
மெர்கேட்டர் வரைபடத்தின் தவறான அளவீடுகள்
ஜெரார்டஸ் மெர்கேட்டர் என்பவரால் 1569 இல் கடல் பயணங்களுக்காக உருவாக்கப்பட்ட பழைய வரைபடம், பூமத்திய ரேகையிலிருந்து தூரத்திலிருக்கும் நிலப்பரப்புகளை நிஜ அளவை விடப் பெரிதாகக் காட்டியது.
உதாரணமாக, ஆப்பிரிக்காவை விட 14 மடங்கு சிறியதான கிரீன்லாந்தை, ஆப்பிரிக்காவின் அதே அளவில் அது காட்டியது.
இதனால் ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் அளவு செயற்கையாக சுருக்கப்பட்டு, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பகுதிகள் அளவுக்கு அதிகமாகப் பெரிதாகக் காட்டப்பட்டு வந்தன.
புதிய வரைபடம்
ஈக்வல் எர்த் வரைபடத்தின் சிறப்பம்சங்கள்
2018 ஆம் ஆண்டு வரைபடக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஈக்வல் எர்த் வரைபடம், அனைத்துக் கண்டங்கள் மற்றும் நாடுகளின் உண்மையான பரப்பளவை சரியான விகிதத்தில் துல்லியமாகக் காட்டுகிறது.
இதன் மூலம் ஆப்பிரிக்க கண்டம் முன்பை விடப் பெரியதாகவும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா பகுதிகள் அவற்றின் நிஜமான சிறிய அளவிலும் காட்சியாகின்றன.
இது உலகெங்கிலும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உலக அமைப்பைப் பற்றிய சரியான புவியியல் பார்வையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா எதிர்ப்பு
அமெரிக்காவின் எதிர்ப்பு மற்றும் எதிர்கால நடைமுறை
இந்தத் தீர்மானம் தங்களை அரசியல் ரீதியாக உள்நோக்கத்துடன் அச்சுறுத்துவதாகக் கூறி அமெரிக்கா தீவிரமாக எதிர்த்துள்ளது.
எனினும், பிரான்ஸ் நாடு தனது பள்ளிப் பாடப்புத்தகங்களில் பழைய மெர்கேட்டர் வரைபடத்தை நீக்க முடிவெடுத்துள்ளது.
இந்த ஐநா தீர்மானம் கட்டாயச் சட்டம் அல்ல என்ற போதிலும், கல்வி நிறுவனங்கள், வரைபட நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் இனி வரும் காலங்களில் இந்த புதிய துல்லியமான வரைபடத்தைப் பரவலாகப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகின்றன.