அமைதிப் பேச்சுகளுக்கு அமெரிக்கத் தூதர்கள் வருகை; தற்காலிகமாக வான்வழித் தாக்குதல் நிறுத்தப்படுவதாக ஜெலென்ஸ்கி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 4.5 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்புத் தூதர்கள் இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்கின்றனர். இதனையொட்டி, அமெரிக்கத் தூதர்களின் வருகை மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தை முடியும் வரை இரு தரப்பிலும் வான்வழித் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்மொழிந்துள்ளார். இக்காலகட்டத்தில் தங்கள் தரப்பிலிருந்து எந்தவொரு தாக்குதலும் நடத்தப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்கா
அமெரிக்கத் தூதர்களின் வருகை மற்றும் பாதுகாப்பு
அமெரிக்க சிறப்புத் தூதர்களான ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் மாஸ்கோ மற்றும் கீவ் நகரங்களுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
தூதர்களின் பாதுகாப்பான பயணத்தையும், வான்வெளிப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் தங்கள் தரப்பிலிருந்து எந்தவொரு வான்வழித் தாக்குதலும் நடத்தப்படாது என்றும், ரஷ்யாவும் இதையே பின்பற்ற வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.
தூதர்களின் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் உக்ரைன் தீவிரமாக செய்து வருகிறது.
ரஷ்யா
ரஷ்யாவின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்கள்
ஜெலென்ஸ்கியின் இந்த அமைதி முன்மொழிவு வெளியாவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, உக்ரைனின் உளவுத்துறை தலைமையகத்தைக் குறிவைத்து ரஷ்யா நடுப்பகலில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இரவில் மட்டுமே நடந்து வந்த தாக்குதல்கள் தற்போது பகல் நேரங்களிலும் தொடர்வதுடன், உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் போர் முனைகளில் எந்த முன்னேற்றமும் இன்றி முட்டுக்கட்டை நிலை நீடித்து வருகிறது.
தொடர் வான்வழித் தாக்குதல்களால் பொதுமக்கள் உயிரிழப்பதும், நாட்டின் முக்கியக் உள்கட்டமைப்புகள் சேதமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.
உக்ரைன்
போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைன் விருப்பம்
வாஷிங்டன் தரப்பிலிருந்து கொண்டுவரப்படும் திட்டங்கள் மற்றும் மாஸ்கோவின் பதிலைப் பொறுத்து அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உண்மையான மற்றும் சாத்தியமான வழிகளைக் கண்டறிவதே உக்ரைனின் முதன்மை நோக்கம் என்றும், அமெரிக்க தூதர்களுடனான சந்திப்பை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றத் தயாரிப்புகள் நடந்து வருவதாகவும் செலென்ஸ்கி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்தத் தூதரக முயற்சி வெற்றி பெறுமா என்பதை உலக நாடுகள் கவனித்து வருகின்றன.