Loading...
'பெண்களை ஆபாசமாகப் பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்': உதயநிதி ஸ்டாலின் விவகாரம் குறித்து பேசிய முதல்வர் விஜய்
உதயநிதி ஸ்டாலின் விவகாரம் குறித்து பேசிய முதல்வர் விஜய்

'பெண்களை ஆபாசமாகப் பேசினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்': உதயநிதி ஸ்டாலின் விவகாரம் குறித்து பேசிய முதல்வர் விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 07, 2026
11:10 am

செய்தி முன்னோட்டம்

தமிழக சட்டமன்றத்தில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான பதிலுரையின் போது பேசிய முதலமைச்சர் விஜய், பெண்களை ஆபாசமாகவும் இழிவாகவும் பேசுபவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும் எனக் கடுமையாக எச்சரித்தார். அவையில் பேசிய முதலமைச்சர்,"கருத்துரிமையையும் பேச்சுரிமையையும் எந்த அளவுக்குச் சரியாகப் பயன்படுத்துகிறோம் என்பதை அனைவரும் யோசிக்க வேண்டும். அரசியலுக்காக மக்களையோ, பெண்களையோ தரம் தாழ்த்திப் பேச வேண்டாம். சமீபகாலமாகத் தமிழ்நாட்டில் ஆபாச நதியும் வன்ம நதியும் ஓடிக்கொண்டிருக்கிறது". "வீட்டில் இருக்கும் தாய், சகோதரிகளை மனதில் வைத்துக்கொண்டு பேச வேண்டும். திரைப்படங்களில் நடித்த காலத்தில் இருந்து இன்று மக்கள் என்னை இந்த இடத்தில் அமர்த்தியதற்கு நம் வீட்டுப் பெண்களே முக்கியக் காரணம். அவர்களை அவதூறாக பேசினால் அரசு வேடிக்கை பார்க்காது" என்று தெரிவித்தார்.

சர்ச்சை

உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பின்னணி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இதே சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் அரசியல் காரணங்களுக்காக யாருக்கும் அத்தகைய சூழல் உருவாகக் கூடாது என்றார்.

சமீபத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரிப் போராட்டத்தின் போது, நடிகை த்ரிஷாவின் பெயரைக் குறிப்பிட்டுத் துணை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் பேசியதாகக் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுப் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தை நேரடியாகக் குறிப்பிடாமல், பெண்களை அவமதிக்கும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என முதலமைச்சர் விஜய் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

ஆர்.எஸ் பாரதி

தொடர் சர்ச்சை பேச்சில் ஈடுபடும் திமுக தலைவர்கள்

திமுக உறுப்பினர்களின் சட்டசபை பேச்சைக் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், "எலும்பை உடைப்பேன்" என திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியதையும், "ஓட்டு போடாவிட்டால் நல்ல சாவே வராது" என ஆர்.எஸ்.பாரதி பேசியதையும் விமர்சித்து, மக்கள் தீர்ப்பை அரசியல் தலைவர்கள் மதிக்க வேண்டும் எனத் தன் உரையை நிறைவு செய்தார்.

அதோடு உதயநிதி ஸ்டாலின் கைதின் போது, ஆர்.எஸ் பாரதி, "இது போன்ற பேச்சு புதிதில்லையே" எனக்கூறியதையும் விமர்சித்த முதல்வர், இது போன்ற ஆபாசம் மற்றும் அநாகரீக பேச்சிற்கு கண்டனத்தையும் பதிவிட்டார்.

அரசியல் எப்போதும் நாகரீக விவாதமாக இருப்பதே நல்லது எனவும், அதை பின்பற்றதால் தான் திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்திருப்பதாகவும் கூறினார்.

ADVERTISEMENT