டெலிகிராம் செயலி திடீர் முடக்கம்: இந்தியா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் பயனர்கள் பெரும் அவதி
செய்தி முன்னோட்டம்
பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராம், செப்டம்பர் 8 செவ்வாய்க்கிழமை காலை உலகளவில் பெரும் சேவை முடக்கத்தை எதிர்கொண்டது. இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பயனர்கள் செய்திகளை அனுப்பவோ, பெறவோ முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இணையதளச் சேவை முடக்கங்களை நேரடியாக கண்காணிக்கும் Downdetector தளத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் காலை 8:15 மணியளவில் 1,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் டெலிகிராம் சேவை முடக்கம் குறித்துப் புகார்களைப் பதிவு செய்தனர். அமெரிக்காவில் திங்கள்கிழமை இரவு (EDT) 10:46 மணி முதல் பயனர்கள் இத்தகைய சிக்கல்களை சந்திக்கத் தொடங்கினர்.
பாதிப்பு
சிங்கப்பூரில் நிலவும் கடும் பாதிப்பு
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிங்கப்பூரில் தான் இதன் பாதிப்பு மிக அதிகமாகக் காணப்பட்டது. அங்குள்ள உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணியளவில் 4,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் ஒரே நேரத்தில் சேவைக் கோளாறுகள் குறித்து முறையிட்டுள்ளனர்.
மேலும் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற அண்டை நாடுகளிலும் இப் பிரச்சனை எதிரொலித்துள்ளது.
செயலி சரியாக லோட் ஆகாதது, செய்திகள் டெலிவரி ஆகாதது மற்றும் கணக்கில் 'லாகின்' செய்ய முடியாதது போன்ற சிக்கல்களை பயனர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்தத் தொழில்நுட்ப கோளாறுக்கான துல்லியமான காரணம் குறித்து டெலிகிராம் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.
இருப்பினும், தற்போதைய நிலவரப்படி சில பகுதிகளில் சேவைகள் படிப்படியாகச் சீரடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.