பாஜக அண்ணாமலையை விசாரிக்க இருக்கும் போலீஸ்
வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையை போலீஸார் விசாரிக்க இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) தலைவர், K அண்ணாமலை மீது குழுக்களுக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் வன்முறையைத் தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை மேலும் வலுவாக்கும் விதமாக கூடுதல் பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையிடம் விசாரணை நடத்துவது குறித்து சைபர் கிரைம் போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். விசாரணை அதிகாரியின் முன் ஆஜராகும்படியும், அவரது கூற்றுகளுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும்படியும் பாஜக தலைவருக்கு சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திமுக தலைவர்களுக்கு எதிரான அறிக்கை
தமிழகத்தில் வேலை செய்யும் பீகார் மாநில தொழிலாளர்கள் பற்றி தவறான வதந்திகளை பரப்பியதாக பீகார் மாநில பாஜக IT விங் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, FIRரில் IT பிரிவு அதிகாரிகளின் பெயர்களும் சேர்க்கப்படும். புலம்பெயர்ந்த வட இந்திய தொழிலாளர்கள் பற்றி வெறுப்பூட்டும் கருத்துக்களை பேசியதாக திமுக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு அண்ணாமலை மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 153, 153A(1)(a), 505(1)(b), மற்றும் 505(1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.