Loading...
நீலாங்கரையில் இருந்து ராஜா அண்ணாமலைபுரத்திற்கு மாறும் முதல்வர் விஜய்: புதிய அரசு இல்லம் குறித்த முழு விவரம்
முதலமைச்சர் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள அரசு இல்லத்திற்கு மாற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

நீலாங்கரையில் இருந்து ராஜா அண்ணாமலைபுரத்திற்கு மாறும் முதல்வர் விஜய்: புதிய அரசு இல்லம் குறித்த முழு விவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2026
02:09 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, நீலாங்கரை இல்லத்தில் இருந்து ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள அரசு இல்லத்திற்கு மாற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் தற்போது நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தினமும் தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்கிறார். நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகம் சுமார் 17 முதல் 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அவர் வரும் வழியில் பல இணைப்புச் சாலைகள் உள்ளதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக சாலைப் போக்குவரத்து தற்காலிகமாகத் தடை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசல் மற்றும் பெரும் சிரமம் ஏற்படுவதைத் தவிர்க்க முதல்வர் விஜய் விரும்புகிறார்.

பொதிகை இல்லம்

முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு வசித்த 'பொதிகை இல்லம்' தேர்வு

தலைமைச் செயலகத்திற்கு விரைவில் சென்று வரவும், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் தலைமைச் செயலகத்திற்கு அருகிலுள்ள விஐபி குடியிருப்புப் பகுதிக்கு மாறத் திட்டமிடப்பட்டுள்ளது.

ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள டி.ஜி.எஸ்.தினகரன் சாலை மற்றும் பசுமை வழிச்சாலை பகுதிகள் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் வசிக்கும் மிகப்பாதுகாப்பான விஐபி பகுதியாகும்.

அங்கே தொல்காப்பிய பூங்காவுக்கு எதிரே உள்ள 'பொதிகை வளாகம்' அரசு இல்லத்தை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர்.

இந்த வீடு முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு வசித்த வீடாகும்.

இங்குள்ள இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் வெறும் 8 கிலோமீட்டர் தூரமே உள்ளதால், மிகக் குறுகிய நேரத்தில் தலைமைச் செயலகத்தை அடைந்துவிட முடியும்.

புனரமைப்பு

புனரமைப்புப் பணிகள் தீவிரம்

தற்போது காலியாக உள்ள பொதிகை வளாகத்தை முதலமைச்சரின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்கு ஏற்பப் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

உயர் காவல்துறை அதிகாரிகளும் அந்த இல்லத்தை நேரில் பார்வையிட்டுப் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்துள்ளனர்.

புனரமைப்புப் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு, முதல்வர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கிருந்து தனது அலுவலகப் பணிகளைத் தொடங்குவது குறித்து இறுதி முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT