தமிழ் மொழி அனைவரையும் வாழவைத்து கொண்டிருக்கிறது - மு.க.ஸ்டாலின் உரை
வடஅமெரிக்காவின் தமிழ் சங்கப்பேரவை விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், "தமிழ்மொழி அனைவரையும் வாழவைக்கும், வாழ வைத்து கொண்டிருக்கிறது" என்று பெருமிதமாக பேசியுள்ளார். தொடர்ந்து அவர், கணிக்க முடியா தொன்மையான வரலாற்றினை தமிழும், தமிழ் இனமும் கொண்டுள்ளது. எழுத்தறிவு மற்றும் படிப்பறிவு கொண்ட மேம்பட்ட சமூகமாகவே தமிழ் சமூகம் விளங்குகிறது. இதற்கு கீழடி அகழாய்வு முடிவுகள் சான்றாக அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக கல்வெட்டுகளை கொண்ட மாநிலம் தமிழகம் தான். அதிலும் மதுரை மாவட்டத்தில் அதிகளவு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரபரணியாற்றின்பகுதியில் உள்ள கரும்பொருநை என்னும் பகுதியில் நடந்த ஆய்வுகள்மூலம் 3100 ஆண்டுகளுக்கும் முந்தைய சமூகமாக தமிழ் சமூகம் இருந்தது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ளார்.
விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு உத்தரவு
இதனை தொடர்ந்து பேசிய அவர், மயிலாடுதுறையில் நடத்தப்பட்ட ஆய்வில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இரும்பினை உபயோகித்த சமூகமாக தமிழ் சமூகம் இருந்துள்ளது. சிவகிரியில் நடந்த ஆய்வில் செங்கல் வடிகால் அமைப்பு மூலம் நல்ல தண்ணீர் எடுத்த தமிழ் சமூகம் குறித்து நாட்டு மக்களுக்கு தெரியவந்தது. தொல்லியல் துறை ஆய்வுகள் மூலமே தமிழரின் வரலாறு வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அதனை மேலும் தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. அதன்படி அகரம், கொந்தகை, துலுக்கப்பட்டி போன்ற 7 இடங்களில் மேலும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ் என்பது மொழியாக மட்டுமில்லாமல் உயிராக, அமுதாக, மணமாக இருந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.