ஆப்பிள் வாட்ச்சை திருட முயன்ற ஸ்விக்கி ஜீனி ஊழியர், துரத்திப்பிடித்த உரிமையாளர்
ஸ்விக்கி ஜீனியைச் (Swiggy Genie) சேர்ந்த விநியோக நிர்வாகி ஒருவர், பயனாளர் ஒருவரின் பொருளைத் திருடிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்தப் பயனாளர் பதிவிட்டிருப்பதையடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஒரு நகருக்குள்ளேயே நம்முடைய பொருட்களை நம்மிடமிருந்து வாங்கி, வேறொருவருக்கு டெலிவரி செய்யும் சேவையை ஜீனி (Genie) என்ற பெயரில் வழங்கி வருகிறது ஸ்விக்கி. நண்பருடைய வீட்டில் மறந்து விட்ட ஆப்பிள் வாட்ச் அல்ட்ராவை எடுத்து வரும் பொருட்டு ஸ்விக்கி ஜீனி சேவையைப் பயன்படுத்தியிருக்கிறார் பயனர் ஒருவர். அந்த பார்சலைப் பெற்ற ஸ்விக்கி ஜீனி ஊழியர் அதனைப் உரிமையாளரிடம் ஒப்படைக்காமல், திருட முயற்சி செய்திருக்கிறார்.
துரத்திப்பிடித்த உரிமையாளர்:
பார்சலைப் பெற்ற ஸ்விக்கி ஜீனி ஊழியர், பார்சலைப் பெறுபவர் மற்றும் பார்சலைக் கொடுத்தவர் இருவரது எண்ணையும் தன்னுடைய மொபைலில் ப்ளாக் செய்து விட்டு ஆர்டரைக் கேன்சல் செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஐபோனில் உள்ள லொகேஷன் வசதியைப் பயன்படுத்தி அந்த ஸ்விக்கி ஜீனி ஊழியரை மடக்கிப் பிடித்திருக்கிறார், ஆப்பிள் வாட்சின் உரிமையாளர். அந்த ஸ்விக்கி ஜீனி ஊழியர் திருடிய வாட்சின் மதிப்பு ரூ.82,000 என்றும் தெரிவித்திருக்கிறார் அவர். இது குறித்து ஸ்விக்கியின் சாட்பாட்டில் உரையாடியும் எந்த பயனும் இல்லை எனத் தெரிவித்திருக்கும் ட்விட்டர் பயனர், ஸ்விக்கி நிறுவனத்திற்கு இந்தச் சம்பவம் குறித்து மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதாக உறுதியளித்திருக்கிறது ஸ்விக்கி நிறுவனம்.