'தூய்மை இந்தியா' திட்டம்: 75% இந்திய கிராமங்களில் திறந்தவெளி மலம் கழித்தல் ஒழிக்கப்பட்டுள்ளது
பிரதமர் நரேந்திர மோடி, தூய்மை இந்தியா(ஸ்வச் பாரத்) திட்டத்தை தொடங்கி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. இந்த ஒன்பது ஆண்டுகளில், தூய்மை மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றில் இந்தியா பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. உலகின் மிகப்பெரிய தூய்மை இயக்கங்களில் ஒன்றான 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், இதுவரை 14 மாநிலங்களில் திறந்தவெளி மலம் கழித்தல் மொத்தமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் இருக்கும் 28 மாநிலங்களுள் 14 மாநிலங்களிலும் 8 யூனியன் பிரதேசங்களிலும் திறந்தவெளி மலம் கழித்தல் 100% ஒழிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 100% திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத(ODF) பிளஸ் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இந்த பகுதிகளை ODF பிளஸ் என்றும் அழைக்கலாம்.
கடந்த ஆண்டுகளில் இந்திய கிராமங்கள் எந்த அளவு முன்னேறி உள்ளன?
கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமர் மோடியால் தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது . அப்போதிலிருந்து இந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வரை, 75% இந்திய கிராமங்கள்(அதாவது 4.49 லட்ச கிராமங்கள்) தங்களை ODF பிளஸ் என்று அறிவித்துள்ளதாக குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அக்டோபர் 1, 2023 நிலவரப்படி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 4,49,005 ODF பிளஸ் கிராமங்களில், 11,23,41,558 வீட்டுக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 2,32,889 கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மையும், 3,82,395 கிராமங்களில் திரவக் கழிவு மேலாண்மையும், 2,388 பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையும், 1,631 கிராமங்களில் கோபர்தன் ஆலைகளும் கடந்த 9 ஆண்டுகளில் அமைக்கப்பட்டுள்ளன.