சித்தராமையா Vs டிகே.சிவகுமார் பிரச்சனை: கர்நாடகாவில் ஆட்சி காலம் இரண்டாக பிரிக்கப்படுமா
கர்நாடக முதல்வர் யார் என்ற சஸ்பென்ஸ் நீடித்து வரும் நிலையில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகிய இருவருக்கும் ஆட்சி காலத்தை பிரித்து வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக மாநிலத்தை யார் வழிநடத்துவது என்பதை முடிவு செய்ய காங்கிரஸ் கட்சி நேற்று பரபரப்பான ஆலோசனை நடத்தியதால், சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆகிய இருவருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், முதல்வர் பதவிக் காலத்தை காங்கிரஸ் பிரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சித்தராமையாவை முதல் 2 ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியில் அமர்த்த சிவகுமார் தயாராக இருந்தால், அவருக்கு 3 ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சித் தலைமை கூறியதாக கூறப்படுகிறது.
கார்கேவை தனித்தனியாக சந்தித்து பேசிய கர்நாடக தலைவர்கள்
கர்நாடக முதல்வர் பதவி குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக காங்கிரஸ் தலைமை இன்று மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. கர்நாடக முதல்வர் வேட்பாளர்களான சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை நேற்று தனித்தனியாக சந்தித்து பேசினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவுக்கு பொறுப்பான AICC பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் பொதுச் செயலாளர்(அமைப்பு) கே.சி.வேணுகோபால் ஆகியோர் கார்கேவுடன் 90 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதி முடிவு எடுப்பதற்கு முன் சோனியா காந்தியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. "கர்நாடக முதல்வர் நியமனம் குறித்து ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும்" என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா கூறி இருந்தார்.