
வேவு பார்க்க அனுப்பப்பட்ட புறா, ஒடிஷா கடற்கரையில் பிடிபட்டது
செய்தி முன்னோட்டம்
ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தின் பாரதீப் கடற்கரையில் மீன்பிடி படகில் இருந்து கேமரா மற்றும் மைக்ரோசிப் போன்ற சாதனங்கள் பொருத்தப்பட்ட புறா ஒன்று பிடிபட்டது. இந்த பறவை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு மீனவர்கள் சிலர் தங்கள் படகில் இருந்த புறாவை பிடித்தனர். இந்த பறவை நேற்று(மார் 8) பரதீப்பில் உள்ள கடல் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
"எங்கள் கால்நடை மருத்துவர்கள் பறவையை பரிசோதிப்பார்கள். அதன் கால்களில் பொருத்தப்பட்ட சாதனங்களை ஆய்வு செய்ய நாங்கள் மாநில தடய அறிவியல் ஆய்வகத்தின் உதவியை நாடுவோம். அதில் பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் ஒரு கேமரா மற்றும் மைக்ரோசிப் போல் தெரிகிறது," என்று ஜகத்சிங்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் ராகுல் பிஆர் தெரிவித்தார்.
ஒடிஷா
பறவையின் இறகுகளில் இருந்த எழுத்துக்கள்
உள்ளூர் போலீஸாருக்குத் தெரியாத மொழியில் பறவையின் சிறகுகளில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறதாம்.
"எழுதப்பட்டதைக் கண்டறிய நிபுணர்களின் உதவியும் கோரப்படும்" என்று எஸ்பி கூறியுள்ளார்.
'சாரதி' என்ற மீன்பிடி இழுவை படகின் ஊழியர் பீடம்பர் பெஹெரா, படகில் முதன்முதலாக புறாவை தான் பார்த்ததாக கூறினார்.
"திடீரென்று பறவையின் கால்களில் சில கருவிகள் இணைக்கப்பட்டிருப்பதை நான் கவனித்தேன். அதன் இறக்கைகளில் ஏதோ எழுதப்பட்டிருப்பதையும் கண்டேன். அது ஒடியாவில் இல்லாததால் என்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை" என்று பெஹெரா கூறியுள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோனார்க் கடற்கரையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் படகு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டபோது, புறா கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக அந்த பறவைக்கு உடைத்த அரிசியை உணவாக கொடுத்ததாக பெஹெரா கூறியுள்ளார்.