திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: 11 அரசு அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது
செய்தி முன்னோட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றாத விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் மற்றும் இடைக்கால மனுக்கள் அனைத்தும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. முன்னதாக, இந்த மனுக்களை வியாழக்கிழமையே பிற்பகல் 2 மணிக்கு அவசரமாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. அதனை நிராகரித்த நீதிபதிகள், அனைத்து மனுக்களும் வெள்ளிக்கிழமை ஒன்றாக பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.
விசாரணை
விசாரணைக்கு வரும் முக்கிய மனுக்கள் என்னென்ன?
திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்திற்குப் பதிலாக, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மூல வழக்கு தொடர்ந்த ஹிந்து தமிழர் கட்சியைச் சேர்ந்த ராம ரவிக்குமார் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவருடன் வழக்கறிஞர் வி. ராமசுப்பு, இந்து தர்ம பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவமதிப்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், தீபத்தூணில் மீண்டும் தீபம் ஏற்ற அவசர உத்தரவு பிறப்பிக்கக் கோரிய ரிட் மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
அவமதிப்பு வழக்கு
அவமதிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள 11 எதிர்மனுதாரர்கள்
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற தவறியதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தமிழக அரசின் உயரதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் என மொத்தம் 11 பேர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் விவரம் வருமாறு:
இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வினய்
மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா
மதுரை மாநகரக் காவல் ஆணையர் ராஜேந்திரன்
காவல் துணை ஆணையர் இனிகோ விஜயன்
இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர்
திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர்
கோயில் அறங்காவலர் குழுவைச் சேர்ந்த 5 அறங்காவலர்கள்
இத்துடன், உச்ச நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் பங்கு தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் அவமதிப்பு மனுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
வழக்கின் பின்னணியும், உச்ச நீதிமன்ற உத்தரவும்
கடந்த நவம்பர் 20-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று இந்த ஆண்டு மட்டும் தற்காலிகமாக தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கியிருந்தது.
கோயில் தேவஸ்தானம் நியமிக்கும் குழுவைக் கொண்டு, மதுரை மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில், உரிய காவல்துறை பாதுகாப்புடன் பொதுமக்கள் யாருமின்றி ஒருமுறை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், நவம்பர் 24-ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றப்பட்டதால், நீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டதாகக் கூறி இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.