உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, மீண்டும் MP ஆகிறார் ராகுல் காந்தி!
2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில், கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார். "எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்னும் பெயரினை பொதுவாக வைத்துள்ளார்கள்?" என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக.,எம்எல்ஏ.,பர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுத்திருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, அவரது எம்.பி.பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து இவரது மேல்முறையீட்டு மனுவினை சூரத் அமர்வு நீதிமன்றம் விசாரித்து, சூரத் நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்
இதனை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகால சிறைத்தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. "அதிகபட்ச தண்டனை காரணமாக தனிநபரின் உரிமை மட்டுமல்லாமல் தொகுதி மக்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது; இந்த வழக்கில் ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அளவிற்கு இந்த வழக்கு பொருத்தமானதா? ஒரு ஆண்டு 11 மாதம் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் ராகுல் காந்தி தனது எம்.பி பதவியை இழந்திருக்க மாட்டார். ராகுல்காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது ஏன்? அவதூறு வழக்கை ஒழுக்க கேடாக கருதி, ஆதாரமின்றி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது" என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.