டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு இடைக்காலப் பாதுகாப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
டாஸ்மாக் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சரும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த இடைக்கால நிவாரணம் வழக்கில் மிக முக்கியமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, மனுதாரர் தற்போது அமைச்சர் பதவியில் இல்லை என்றும், இதனால் அரசு அதிகாரிகளிடமோ அல்லது சாட்சிகளிடமோ அவர் பழையபடி செல்வாக்கைப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும், அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதை உறுதி செய்ய தேவையான உரிய நிபந்தனைகளை விதிக்க முடியும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
வாதங்கள்
கபில் சிபல் முன்வைத்த வாதங்கள்
செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு 2026-ல் தான் முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என வாதிட்டார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கைது நடவடிக்கையிலிருந்து உடனடி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
எதிர்ப்பு
தமிழக அரசின் கடும் எதிர்ப்பு
மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கத் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என்றும், இந்நேரத்தில் நிவாரணம் அளித்தால் வழக்கு விசாரணை மற்றும் சாட்சியங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் வாதிட்டனர்.
இருப்பினும், மாநில அரசின் இந்த எதிர்ப்பை உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்க மறுத்துவிட்டது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராகச் செந்தில் பாலாஜி பதவி வகித்த காலத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் பெருமளவில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப் பதிவு செய்தது.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், மனுதாரர் தலைமறைவாக மாட்டார் என்பதை உறுதிசெய்து இந்த இடைக்கால நிவாரணத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.