சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு; தண்டனை விபரங்கள் எப்போது?
செய்தி முன்னோட்டம்
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கோவை சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான இருவரும் குற்றவாளிகள் என கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று (நவம்பர் 27) தீர்ப்பளித்துள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற விசாரணையில் நீதிபதி ஹரிகரன் இன்று நவம்பர் 27 அன்று குற்றவாளிகள் கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் குற்றவாளிகள் இருவருக்குமான தண்டனை விவரங்கள் வரும் டிசம்பர் 4 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடூர பின்னணி
சாக்லேட் ஆசை காட்டி சிறுமியை கடத்தி கொலை செய்த கொடூரப் பின்னணி
கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையத்தில் கடந்த மே மாதம் 21 ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி திடீரென மாயமானார்.
மறுநாள் கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னந்தோப்பில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கார்த்திக் மற்றும் அவரது நண்பர் மோகன்ராஜ் ஆகியோரைக் கைது செய்தனர்.
விரிஆய்வான விசாரணை
21 நாட்களில் 819 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் மற்றும் விரைவான நீதிமன்ற விசாரணை
காவல்துறை விசாரணையில் சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
முன்னதாக போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது கீழே விழுந்ததில் கார்த்திக்கிற்கு வலது கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த வழக்கை மிக தீவிரமாக விசாரித்த காவல்துறையினர் சம்பவம் நடந்த 21 நாட்களிலேயே 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
தண்டனை எதிர்பார்ப்பு
டிசம்பர் 4 ஆம் தேதி தண்டனை அறிவிப்பு மற்றும் அதிகபட்ச தண்டனை எதிர்பார்ப்பு
இந்த வழக்கில் ஏராளமான சாட்சிகள் மற்றும் தடயவியல் ஆதாரங்கள் விசாரிக்கப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருந்தது.
பின்னர் நவம்பர் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று இருவரும் குற்றவாளிகள் என நீதிபதி ஹரிகரன் தீர்ப்பளித்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உள்ளிட்ட அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள தண்டனை விவரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.