தமிழகத்தில் கோவில் கட்டும் இன்போசிஸ் சுதா மூர்த்தி; எங்கே தெரியுமா?
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஐவநல்லூர் கிராமத்தில், பழமையான சிலைகளை வைத்து வழிபாடு நடத்தும் கிராமத்தினருக்கு புதிய கோவிலை கட்டுவதாக ராஜ்யசபா எம்.பி., இன்போஸிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சுதா மூர்த்தி முடிவெடுத்துள்ளார். இந்த கோவிலை தனது சொந்த செலவில் கட்டிமுடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். கோவில் கட்டுவதற்கான முடிவை பற்றி அவர் கூறும்போது, "என் தாத்தா விஜயநகர பேரரசின் கதைகளை சொல்லுவார். கல்வியை போதித்தல், பிறருக்கு உதவிகள் செய்வது, குளங்கள் மற்றும் கோவில்கள் கட்டுவது என்பன வாழ்க்கையை முழுமையாக நிறைவேற்ற உதவுகின்றன" என்றார். மேலும், "கோவில்கள் மற்றும் குளங்களை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்துவதால், புதிதாக கோவில்கள் கட்டுவது மறந்து விட்டது" என்றார்.
18 மாதங்களில் கட்டிமுடிக்கப்படும் என நம்பிக்கை
சுதா மூர்த்தி 18 மாதங்களில் ஐவநல்லூரில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளார். கடந்த வாரம் கோவில் பூமி பூஜையில் அவர் கலந்து கொண்டு பேசிய அவர், பாரம்பரிய கலாசாரம் மற்றும் முறைகளை பின்பற்றியே அனைத்து சடங்குகளும் நடைபெறும் என உறுதி செய்துள்ளார். இங்குள்ள சிவலிங்கத்திற்கு சுமார் 1500 ஆண்டுகள் வரலாறு உண்டு. இங்குள்ள சிறிய கோவிலில் உள்ள பழமையான சிவன், பார்வதி, விநாயகர், முருகன் மற்றும் நந்தி சிலைகளை கிராம மக்கள் வணங்கி வருகின்றனர். சமீபத்தில், சுதா மூர்த்தி தலைமையில், கோவில் திருப்பணிகள் முறையாக நடந்தன. திருப்பணியின் போது, ரதோற்சவம் போன்ற சமய நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்பட்டுள்ளன.