பொதுமக்கள் வங்கி கணக்குகளில் திடீர் டெபாசிட் - அதிர்ச்சியில் வங்கி ஊழியர்கள்
தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள ஏட்டூர் என்னும் நகரில் நேற்று முன்தினம்(ஆகஸ்ட்.,27) திடீரென பொதுமக்கள் வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை மக்கள் தங்கள் மொபைல் போனில் வரும் குறுந்தகவல் மூலம் தெரிந்து கொண்டதோடு, இன்ப அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். எனினும், தங்கள் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பணத்தினை யார் டெபாசிட் செய்திருப்பார்கள்? என்ற குழப்பமும் பொதுமக்கள் மனதில் ஏற்பட்டது. இதனிடையே, எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து மட்டுமல்லாமல் மற்ற வங்கியில் இருந்தும் வாடிக்கையாளர்களுக்கு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
அவசர அவசரமாக தங்கள் வங்கி கணக்கினை சரிபார்த்த பொதுமக்கள்
இதனை தொடர்ந்து மக்கள் தங்கள் வங்கி கணக்கில் டெபாசிட்டான பணத்தினை ஏடிஎம் மூலம் எடுத்துள்ளனர் என்று தெரிகிறது. மற்றும் சிலர் தங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையினை தங்கள் மனைவி, பிள்ளைகள் போன்றோர் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது. இத்தகவல் மாநிலம் முழுவதும் பரவியதை தொடர்ந்து, தங்கள் மொபைல் போனிற்கு குறுந்தகவல் வராத நபர்கள் அவசர அவசரமாக தங்கள் வங்கி கணக்கினை சரிபார்க்க துவங்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திரா மாநிலம் திருப்பதி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் இதேபோன்று பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலையறிந்த வங்கி ஊழியர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில், பொதுமக்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்த விவரங்களை சரிபார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.