சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம்
சுபஸ்ரீ மரணத்தை அடுத்து தங்கள் யோகா மையத்தின் மீது அவதூறு பரப்பப்படுவதாக ஈஷா யோகா மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈஷா யோகா மையத்தின் பயிற்சிக்கு சென்ற கோவையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவரது உடல் செம்மேடு பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. இந்த உயிரிழப்பிற்கான காரணம் சரியாக தெரியவில்லை என்றாலும், கடைசியாக சுபஸ்ரீ ஈஷா யோகா மையதிற்கு வெளியே எங்கோ ஓடுவது போன்ற சிசிடிவி காட்சி பதிவாகி இருக்கிறது. அதனால், பலதரப்பினரும் இந்த மர்மமான மரணத்திற்கு ஈஷா யோகா மையமே காரணம் என்று குற்றம் சுமத்தி வருகின்றனர். இதை எதிர்த்து ஈஷா யோகா மையம் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின் சுருக்கம்
எதிர்பாராத வகையில் நடந்த சுபஸ்ரீயின் மரணம் எங்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், அவர்களுக்கு தேவையான முழு ஒத்துழைப்பையும் எங்கள் மையம் வழங்கி வருகிறது. ஆனால், குறிப்பிட்ட சில அமைப்புகளும் ஊடங்களும் வேண்டமென்றே ஆதாரம் இல்லாத வதந்திகளை பரப்புகின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. சில யூ-டியூப்பர்கள், ஊடக எழுத்தாளர்கள் மற்றும் மக்கள் ஆதரவு இல்லாத அமைப்புகள் இந்த பிரச்சனையை அரசியலாக்க முயல்கிறார்கள். இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஆதாரம் இல்லாத வதந்திகளை பரப்புவது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். என்று ஈஷா யோகா மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.