இனி 12ம் வகுப்பில் அறிவியல் பாடங்களை படிக்கவில்லை என்றாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம்!
செய்தி முன்னோட்டம்
பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான விதிமுறைகளில் புதிய மாற்றங்களை அமல்படுத்தியிருக்கிறது தேசிய மருத்துவ ஆணையம்.
இதுவரை, இயற்பியல், வேதியியல் மற்றும் உயரியல் அல்லது உயிரித்தொழில்நுட்பவியல் ஆகிய பாடங்களை 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இரண்டு வருடங்கள் முறையாகப் படித்து சேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவப் படிப்புகளில் சேரவோ அல்லது நீட்-யுஜி தேர்வை எழுதவோ மாணவர்களால் முடிந்தது.
மேலும், ஓபன் ஸ்கூலிங் முறையிலோ அல்லது தனியார் மையங்கள் மூலமாகவோ மேற்கூறிய பாடங்களைப் படித்திருந்தாலும், மருத்துப் படிப்புகளில் மாணவர்களால் சேர முடியாத வகையில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன.
ஆனால், தற்போது அந்த விதிமுறைகளைத் தளர்த்தி, அவற்றில் மாற்றம் செய்திருக்கிறது தேசிய மருத்துவ ஆணையம்.
கல்வி
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான விதிமுறைகளில் மாற்றம்:
புதிய மாற்றங்களின்படி, 12ம் வகுப்பு வரை எந்த பாடத்தை முதன்மையாக எடுத்துப் படித்திருந்தாலும், 12ம் வகுப்புக்குப் பின்பு, மருத்துவப் படிப்பில் சேரத் தேவையான, இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரிதொழில்நுட்பவியல் ஆகிய பாடங்களுடன் ஆங்கிலத்தையும் கூடுதல் பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றால் போதும்.
அவர்களும், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் மேற்படிப்புகளில் சேர்வதற்கான நீட்-யுஜி தேர்வை எழுதத் தகுதியுடைவர்களாகவே கருதப்படுவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தேசிய மருத்துவ ஆணையம்.
புதிய கல்விக் கொள்கை கொண்டிருக்கும் பல்வேறு வகையிலான 12ம் வகுப்ப பாட வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது தேசிய மருத்துவ ஆணையம். மேற்கூறிய முறையின் கீழ் 2024ம் ஆண்டு நீட் தேர்விலேயே மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.