பேருந்து படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள் - வாசல் ஓர ஜன்னல்களுக்கு இரும்பு கம்பிகள் அமைப்பு
தமிழகத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் படிக்கெட்டுகளில் பயணம் மேற்கொள்வது ஓர் வழக்கமாகி விட்டது. இந்த ஆபத்தான பயணத்தினை மாணவர்கள் மேற்கொள்ளாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டும் படிக்கேட் பயணத்தினை மாணவர்கள் தவிர்ப்பதில்லை. இவ்வாறு ஆபத்தான பயணங்கள் பல மாணவர்களின் உயிரை பறித்த நிலையிலும் இந்த நிலை மாறவில்லை. இந்நிலையில், பேருந்து படிக்கெட்டுகளில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஓர் புதிய முயற்சியினை எடுத்துள்ளனர் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது.
உள்ளூர்களில் ஓடும் அனைத்து பேருந்துகளிலும் தகரம் அடிக்கும் பணி நடப்பதாக தகவல்
பேருந்தின் படிக்கெட்டில் பயணம் செய்யும் மாணவர்கள், பேருந்தின் வாசல்ஓர ஜன்னலின் கம்பிகளை பிடித்து தொங்கியபடி தான் செல்வார்கள். இதனை தடுக்க, அந்த வாசல்ஓர ஜன்னல் கம்பிகள் வெளியில் தெரியாதவாறு அதனை மூடவேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். அதன்படி அந்த 2 ஜன்னல் கம்பிகளையும் மூடும் வண்ணம் இரும்பு தகரம் வைக்கும் பணியில் மாவட்ட போக்குவரத்து பணியாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட மதுராந்தகம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, ஒரிக்கை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 300 பேருந்துகள் இயக்கப்படுகிறதாம். அதில் 140 மாநகரப்பேருந்துகளும் அடங்கும். உள்ளூர்களில் ஓடும் அனைத்து பேருந்துகளிலும் தற்போது இந்த தகரம் அடிக்கும் பணி நடக்கிறது. போக்குவரத்துக்கழக அதிகாரிகளின் இந்நடவடிக்கை பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றுள்ளது.